நிழல் முற்றம்- நூல் விமர்சனம்

மிகச்சிறந்த அனுபவத்தை தந்தது பெருமாள் முருகன் அவர்களின் இந்த நூல்

எம்.ஜி. ஆர் காலத்திய படங்கள் ரீ ரிலீஸ் ஆகும் சினிமாக்கொட்டகையும், கொங்கு பெல்டில் உள்ள திருச்செங்கோடு அருகேயுள்ள நிலப்பரப்பும் தான் கதை நிகழும் களங்கள்

சக்திவேல், நடேசன் உள்பட நான்கைந்து இளைஞர்கள். ஒரு பீடாக்கடைக்காரர், ஒரு சோடாக்கடைக் காரர், தியேட்டர் மேனஜர், படப்பெட்டி வாங்கி கைமாற்றும் ஒருவன், வாட்ச்மேன் தாத்தா, தியேட்டர் அருகே கட்டிலில் பலகாரம் விரித்து விற்கும் பாட்டி, டீக்கடைக்காரன், ஒரு விலைமாது உள்ளிட்ட மாந்தர்களின் சொற்கள் வழியே தான் பெரும்பாலும் கதை நிகழ்கிறது

கதையில், துவக்கம், நடு, முடிவு என சினிமா போன்ற கமர்சியல் வஸ்துவெல்லாம் இல்லை. இது ஓர் அப்பட்டமான வாழ்வியல் படைப்பு. இந்த நாவலில் உலவும் மனிதர்கள் எல்லாம் மிகவும் வித்தியாசமானவர்கள். ஆனால் நம் காலத்தில் இன்னும் நம் கண்களுக்கு அகப்பட்டும், மனதிற்கு புலப்படாமல் இருப்பவர்கள்

தியேட்டருக்குள் நிகழும் திருட்டும், இடைவேளைக்கு கூட்டத்திற்குள் சென்று பலகாரம் விற்பதும் நான் என் வாழ்வில் கண்ட காட்சிகள். அதனால் இந்தக் கதைக்களம் வாழ்வோடு ஒன்றிப்போனது. அநேகம் பேர்களுக்கு இவ்வனுபவம் வாய்த்திருக்கக் கூடும். பெருமாள் முருகன் அவர்கள்,படைத்தளித்துள்ள இந்த நாவல் மனிதர்களின் காமம் அவ்வளவு லேசில் ஏற்றுச் செரிக்க இயலாதது. படப்பெட்டிக்காரன் ஒருவன், சக்திவேலுக்கு சாரயத்தை கொடுத்துவிட்டு, “என் பொண்டாட்டியாட்டமே நீ இருக்கடா” என்று சுவற்றில் சாய்ப்பதும், சக்திவேல் தன் தோழன் நடேசன் மனதுக்குள் உட்கார்ந்து கொள்வதும் நாவலின் அசலான இடங்கள். சக்திவேலின் அப்பா ஒரு தொழு நோயாளி. சக்திவேலை அவர் பார்க்க வரும் காட்சி ஒன்று நாவலில் வரும்

“பாசத்திற்கும் சமூகம் தரும் வாழ்க்கை நெருக்கடிக்கும் நடுவே உள்ள திரையைக் காட்டும் அக்காட்சி”

கொசுக்கடிக்குப் பயந்து தியேட்டரில் தூங்குவதற்காக படம் பார்க்க வரும் தொழிலாளர்களை விவரிக்கும் காட்சியில், எனக்கு எங்கள் ஊரின் லெட்சுமி தியேட்டர் நினைவில் வந்தது. கொத்தனார் கையாள் வேலைக்குச் சென்று இரண்டாம் ஆட்டம் படம் பார்க்கச் செல்வோம். பெரும்பாலும் இரண்டாம் பாதியில் தூங்கிவிடுவோம். படம் முடிந்ததும் தியேட்டர் ஓனர் மாடசாமி பெரியப்பா பேட்ரியை அடித்து முகத்தைப் பார்ப்பார். ஆள் இன்னாரென அறிந்ததும், “தூங்கட்டும்” எனப் போய்விடுவார். அதுவெல்லாம் இப்படியொரு வாழ்வை நினைத்துப் பார்க்காத காலம். செந்தூரப்பாண்டி படத்தை ஒரு ரூபாய் கொடுத்து மணலில் உட்கார்ந்து பார்த்தேன். சென்ற மாதம் வெளியான ஜாலியோ ஜிம்கானா படத்தை 170 ரூபாய் கொடுத்து எங்கள் ஊரே போய் பார்த்தது. 25 வருடங்களில் நடந்த மாற்றத்தை இன்று முழுதும் நினைத்தபடியே இருந்தேன்

நாவலைப் படிக்கும் போது மட்டுமல்ல, படித்தபின்னும் நாவலோடே பயணிக்கிறேன்..

நிழல் முற்றத்திற்கு ஒரு நிஜ முத்தம்😘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *