கமல், மணிரத்னம், ஏ.ஆர் ரகுமான், சிம்பு என பெரும் கூட்டணி கொண்ட இரண்டே முக்கால் மணிநேர தக் லைஃப் எப்படி இருக்கு?
படத்தின் துவக்கம் 1996-ல். கமல் கேங் மற்றும் சதானந்த் பாய் கேங் என இரு கேங் இடையே ஒரு பகை இருக்கிறது. பகைக்குச் சமாதானம் பேசவரும் சூழலைப் பயன்படுத்தி சதானந்த பாய் கேங் போலீஸை ஏவிவிட்டுச் செல்கிறது. உடனே கமல் கேங் போலீஸோடு மல்லுக்கட்டுகிறது. சிலம்பரசன் சிறுவனாக இருக்கும் போது நடக்கும் இந்தச் சண்டையில் சிலம்பரசனுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. அதனால் அவரை தன்னோடு அழைத்து வந்து வளர்க்கிறார் கமல். பின் சினிமாவின் வழக்கப்படி வளர்த்த கடா மார்பில் பாய்கிறது. முடிவில் வெளி யுத்தம் உள் யுத்தமாக மாற படம் End ஆகிறது
70- வயது கமல் படத்திற்குள் தன்னைப் பொருத்திக்கொள்ள எடுத்திருக்கும் முயற்சிகள் பாராட்டக்கூடியவை. சண்டைக்காட்சிகளில் கூட டூப் நடிகரை அதிகமாக பயன்படுத்தவில்லை. இரண்டாம் பாதியில் கமல் எடுத்துள்ள எமோஷ்னல் ரூபம் தரம். சிலம்பரசன் கமலுக்கு ஐடியா கொடுக்கும் இடங்களில் அப்ளாஸ் வாங்குகிறார். க்ளைமாக்ஸ் பைட் சீனிலும் மாஸ். திரிஷா கேரக்டரை இவ்வளவு வீக் ஆகவா எழுதுவார்கள்? அவர் கேரக்டரின் வடிவம் சரியாகவே அமைக்கபப்டவில்லை. அபிராமி சில இடங்களில் ஸ்கோர் செய்கிறார். ஜோஜு, பக்ஸ், நாசர், அசோக்செல்வன் என நிறைய நடிகர்கள் படத்தில் வீணடிக்கப்பட்டுள்ளனர்
ஆளில்லாத கடையில் டீ ஆத்துவதைப் போல பாவம் ஏ.ஆர் ரகுமான் உயிரோட்டமில்லாத காட்சிகளுக்கும் உயிரைக் கொடுத்து வாசித்துள்ளார். பாடல்களின் பங்களிப்பு படத்திற்குப் பெரிதாக தேவைப்படவில்லை என்பதால் பாடல்களோடு ஒன்ற முடியவில்லை. ரவி.கே சந்திரனின் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்திலுள்ளது. டில்லியின் நிலப்பரப்பு, பனிப்பிரதேசம் ஆகிவற்றையும் மிகச்சிறப்பாக காட்டியுள்ளார்.
தொழில்நுட்ப ரீதியாக பலபடி முன்னேறிச் சென்றிருக்கிறது மணிரத்னம் கேங். ஆனால் திரைக்கதையில் மொத்தமாக கோட்டைவிட்டுள்ளனர். படத்தில் தோன்றும் எந்தக் கேரக்டரோடும் நாம். கனெக்ட் ஆகமுடியவில்லை. படத்திற்குள் வரும் கதாப்பாத்திரங்கள் கூட ஒன்றுக்கொன்று ஜெல் ஆகவில்லை. அந்தளவிற்கு சுமாரான ரைட்டிங். என்னதான் மேக்கிங்கில் வித்தைக் காட்டினாலும், ரைட்டிங்கில் சொத்தை என்றால் படம் மொத்தமாக காலி. அந்தத் துயரம் தக் லைஃபில் நடந்துள்ளது
மேலும் படத்தின் துவக்கத்தில் நாசரின் மகள் தன் காதலன் ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொள்வார். இந்தக் காலத்தில் இப்படியொரு காட்சியை வைக்கலாமா? அதுவும் நன்கு படித்த ஒரு பெண் தற்கொலைச் செய்துகொள்கிறாள் என்று காட்டவேண்டிய அவசியம் என்ன? காதல் தோல்வி மட்டுமல்ல எந்தத் தோல்விக்கும் தற்கொலை தீர்வல்ல என்ற நேர்மறையை நோக்கித் தான் நாம் பயணிக்கவேண்டும்.
கமல் சிலம்பரசன் காம்போ,இசை, கேமரா ஆகிய ப்ளஸ்கள் படத்தில் இருப்பதால் ஒருமுறை பார்க்கலாம்
-தக் லைஃப்- ஜஸ்ட் லைக்
3/5
-வெண்பா தமிழ்

