தொடர் கொலைகளும் தொடர்ச்சியான விசாரணையும் தீயவர்களின் குலையை நடுங்க வைத்ததா?
ஈகிள் அப்பார்ட்மெண்டில் தன் காதலனோடு வசித்து வருகிறார் ஆசிரியை-ஆன ஐஸ்வர்யா ராஜேஷ். ஒருபுறம் அர்ஜுன் முகமூடி அணிந்து தொடர்கொலைகள் செய்துவரும் மர்ம நபர் யார் என்பதை கண்டுபிடிக்க விசாரணையில் இறங்குகிறார். அவரின் விசாரணை ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்விலும் நுழைகிறது. அதற்கான காரணம் என்ன? என்பதை பரபர திரைக்கதை மற்றும் சிறப்பான மேக்கிங்கோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன்.
ரெண்டு டூயட், சின்னதா பில்டப் என ஒப்பேற்றிச் செல்லும் கதைகளைத் தவிர்த்து சமூக அக்கறையுள்ள படத்தில் நடித்ததிற்காக ஐஸ்வர்யா ராஜேஷைப் பாராட்டலாம். மிகச் சிறப்பாகவும் நடித்துள்ளார். ஆசிரியை டூ வேறோர் பரிமாணம் என அவரது கேரக்டர் ஆர்க்கும் சிறப்பு. விசாரணை அதிகாரியாக அர்ஜுன் வழக்கம் போல் அசத்தியுள்ளார். ஒரு லிஃப்ட் பைட் மூலமாக “நான் இப்பவும் யெங்” என நிரூபித்துள்ளார். சிறப்பு குழந்தையாக வரும் அனிகா சிறப்பாக நடித்து நம் மனதை வெல்கிறார். அம்மாவாக வரும் அபிராமி முதல் இதர கேரக்டர்களில் வரும் லோகு, வேல. ராமமூர்த்தி, தங்கதுரை ஆகியோர் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளனர்
பரத் ஆதிவகன் பின்னணி இசை படத்தின் டெம்போவை உணர்ந்து ஒலித்துள்ளது. ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யூ தன சிறந்த ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், ஆர்ட் டைரக்டர் அருண் சங்கர்துரை உள்ளிட்ட எந்த டெக்னிஷியன்ஸையும் குறை கூற முடியாது
நல்ல எமோஷ்னல் ட்ராமா கதை இது. கூடவே திரில்லர் அம்சமும் உள்ளது. இதை வைத்து அதிக தரத்தை இயக்குநர் தினேஷ் இலெட்சுமணனால் தந்திருக்க முடியும். ஆனாலுன் தந்தது வரைக்கும் நிறைவு தான். கடைசியில் வரும் ட்விஸ்ட், அனிகாவின் எமோஷ்னல் ஏரியா, ஆணித்தரமாக சொல்லப்பட்ட மெசேஜ் ஆகியவற்றுக்காக இப்படத்தை நாம் ஆரத்தழுவிக் கொள்ளலாம்
3/5
-வெண்பா தமிழ்

