நான் தான் ஔரங்ஸேப்- நூல் விமர்சனம்

முதலில் இந்நூலில் கையொப்பமிட்டு கபிலன் அண்ணனிடம் வழங்கிய சாரு நிவேதிதா அவர்களுக்கும், நூலை என்னிடம் வழங்கிய கபிலன் Kabilan Krs அண்ணனுக்கும் பெரு நன்றி.

வரலாறு என்பது அதை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லித்தருபவர்களின் கைகளில் தான் இருந்திருக்கிறது. இருக்கிறது

ஔரங்கஸேப் என்ற மொகலாய அரசனின் வரலாறை யாரெழுதி வாசித்தாலும் அங்கு, “ஔரங்கஸேப் ஓர் கொடுங்கோலர்” என்ற சித்திரம் இருக்கும். அதில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறதோ..அதே அளவிற்கு எதிர் கருத்துக்களும் இருக்கலாம்.. இருக்கும் என்ற லயத்தைப் பிடித்தபடி பயணிக்கிறது சாருநிவேதிதா எழுதியிருக்கும் இந்நாவல். பேரரசர்கள் வரலாற்றிலே அக்பருக்கு அடுத்து அதிக காலம் அராசாட்சியில் இருந்தவர் ஔரங்கஸேப். (48 ஆண்டுகள்) அவரது தன் வரலாற்று உரையோடுச் சேர்த்து மொகாலய அரசர்கள் அனைவரின் அறிமுகத்தையும், அக்கால அரசியல் நிகழ்வுகளையும், ரத்தங்கள், முத்தங்கள் என பல நிகழ்வுகளை எல்லாம் 4 பாகங்களாகப் விரித்து, 89 அத்தியாங்களாக பிரித்து 917 பக்கங்களில் ஒரு நாவலாக எழுதியிருக்கிறார் சாரு. அட்டகாசமான மொழிநடை. வரலாற்றை நாவலாக..அதுவும் இவ்வளவு இயல்பான மொழிநடையில் விறுவிறுப்பாக எழுத முடியுமா!!! அடடா அபாரம்!!!! ஒரு அகோரியின் உடம்பில் புகுந்து ஒரு எழுத்தாளனிடம் தன் வரலாற்றைச் சொல்கிறார் ஔரங்கஸேப். இப்படித்தான் இந்நாவல் துவங்குகிறது. துவங்கும் போதே சிவாஜி கணேசன், உலகநாயகன், இளைய தளபதி ஆகியோரை ஒரு போடு போட்டுச் செல்கிறார் சாரு..

ஔரங்கஸேப் தன் சகோதரன் தாராவை கொன்று அவன் தலையை தந்தையாகிய ஷாஜகானுக்கு அனுப்புகிறார்..அப்போது ஷாஜகனுக்கு தன் மகன் மகன் தாரா தெரியவில்லை. ஷாஜகான் ஏற்கனவே கொன்றிருந்த அவரது சகோதரன் குஸ்ரோ தான் தெரிகிறான். முன்பு தான் செய்த வினை..இன்று தன் முன்பு விடிந்துள்ளது என்கிறார் ஷாஜகான். தைமூரிய (மொகலாய) வம்சமே உடன் பிறந்தோரையும் உற்ற சொந்தங்களையும் கொன்றே சாம்ராஜ்ஜியம் போற்றியது என்பதே வரலாறு. அதனால் உடன் பிறந்தானைக் கொன்று முடிசூடுவது எனக்கு முன்னே உள்ளவர்கள் செய்தது. இதில் குற்றம் சுமத்த என்ன இருக்கிறது? என்பதைக் கோடிடுகிறார் ஔரங்கஸேப். அக்பர் செய்ததை ஜஹாங்கீர் செய்தார். ஜஹாங்கீரை அவரது மகன் ஷாஜகான் வழி மொழிந்தார். ஷாஜகானை நான் பின் தொடர்கிறேன்

மார்க்கத்தின் வழியே நடப்பேன் என்ற ஔரங்கஸேப்பிற்கு ஒரு பக்கீராக வாழ வேண்டும் என்பது அவா. காலம் அவரை சர்வாதிகாரத்திற்கு அழைத்துச் செல்கிறது. அதன் பயணத்தில் தான் செய்த பாவங்களை அவர் ஒப்புக்கொள்ளும் இடங்களும், சிலவற்றுக்கு வலு சேர்க்கும் இடங்களும் நாவலில் அடிப்பொலி.

ஔரங்கஸேப்-ன் சகோதரி ரோஷானாரா காமக்களியாட்ட விரும்பி… அவளைப் பற்றிய செய்திகள் தன்னை லேசாக வந்தடையவும் தன் ஒற்றனை மேலும் விபரம் சேகரிக்க அனுப்புகிறார் அரசர். விபரம் சேகரிக்கச் சென்று வந்த ஒற்றன் ரோஷானாரா பெருங்கூட்டத்தை நிர்வாணமாக உலவவிட்டு கூத்தடித்த செய்தியைச் சொல்கிறான். மேலும் தன்னோடு தங்கள் சகோதரி அந்த இரவில் நான்கு முறை உறவு கொண்டாள் என்பதையும் ஒற்றன் சொல்ல, ரோஷானாராவிற்கு ஔரங்கஸேப் ஓர் தண்டனை கொடுக்கிறார். அந்தத் தண்டனையின் விபரத்தை வாசிக்கும் போது யானையை விட்டு தலையை இடறும் உடனடி தண்டனை எவ்வளவோ மேல் எனத்தோன்றும்.

தன் மார்க்கத்தின் புனிதத்தை யார் சீண்டினாலும் அங்கு ஔரங்கஸேப் எமவதாரம் எடுப்பார் என்பதைக் காண முடிகிறது. ஔரங்கஸேப் நிம்மதியை குலைத்தவர்களில் மராட்டிய சிவாஜி முக்கியமானவர் என்பதைக் காண முடிகிறது. ஔரங்கஸேப் பார்வையில் சிவாஜியின் செயல்களை பார்த்தால் எக்கச்சக்க விமர்சனங்கள் வந்து கொட்டும் போல..

அகோரி உடலில் இருந்து வாக்குமூலம் கொடுக்கும் ஔரங்கஸேப் ஒருசில இடங்களில் இடைவெளி எடுத்துக்கொள்ள, அகோரியின் உடலில் வேறுசிலரும் வந்து ஔரங்கஸேப் பற்றிப் பேசுகிறார்கள். அதில் ஓர் இந்து ஔரங்கஸேப்பின் நேர்மையை விதந்தோதுகிறான்.

எனக்கு இந்த நூலில் மிகவும் பிடித்த இடம் அகோரியின் உடலில் புகுந்து ஔரங்கஸேப் பற்றியும், தன்னைப்பற்றியும் பேசும் ஜஹானாரா பேகத்தின் வார்த்தைகள் தான்

மார்க்கம் மார்க்கம் என வாய்கிழிய பேசும் ஔரங்கஸேப் பற்றி அவரது சகோதரியான ஜஹானாரா பேகம், “ஔரங்கஸேப் அரசனாக இருக்கும் தகுதியற்றவன் என்ற பொருள்பட சொல்லும் அவர், அரசன் என்பவன் பொதுமை குணம் கொண்டிருக்க வேண்டும் என்கிறார். அக்பருக்கு ஓரளவு வாய்த்த குணம், ஒருதுளி கூட ஔரங்கஸேப்பிற்கு வாய்க்கவில்லை. வன்முறை மூலம் மார்க்கம் வளராது என்பதை அவன் உணரவே இல்லை என்கிறார் பேகம்..

” ஒரு இந்து கோவிலின் முன் நின்று முஸ்லிம் ஒருவன் சிலை வணக்கம் செய்வோர்க்ளைப் பழிக்கிறான். கோவிலில் உள்ளோர் அவனை அடித்துக் கொல்கிறார்கள். கொன்றவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை என்ற தீர்ப்பை நீதிபதி கொடுக்கிறார். தீர்ப்பை இறுதி செய்ய பேரரசரிடம் வழக்கு வருகிறது. பேரரசர் தன் சகோதரி ஜஹானாராவிடம் விவாதிக்கிறார். ஜஹானாரா அவர்களுக்கு மரண தண்டனை வேண்டாம். சிறிய தண்டனை போதும் என்கிறார். அப்படியானால் அவர்கள் செய்தது பெருங்குற்றமில்லையா? என்று ஔரங்கஸேப் சீறுகிறார். மேலும் சிலை வணக்கத்தை விமர்சிப்பதில் என்ன தவறு? என்கிறார். அதற்கு ஜஹானாரா பேகம், “நம்மவன் சிலை வணக்கங்களை விமர்சித்தது தவறு அல்ல..ஆனால் அவர்களின் இடத்திற்கேச் சென்று அதைச் செய்தது தவறு என்கிறாள். அதோடு “உங்கள் மார்க்கம் உங்களுக்கு. அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு” என்ற அறம் சார்ந்த குரான் வசனத்தைச் சொல்கிறாள். குரானை தலைகீழாக மனப்பாடம் செய்துள்ள ஔரங்கஸேப், ” சிலை வணக்கத்திற்கு எதிராக குரானில் உள்ள பாயிண்ட்களை அடுக்குகிறார். முடிவில் ஜஹானாரா பேகம் வாதம் தோல்வியுறுகிறது. இந்த இடத்தில் ஜஹானாரா பேகம் ஒன்றைச் சொல்கிறார். “ஒரு நாட்டின் அரசன் எல்லா மக்களுக்கும் தான் அரசன். முஸ்லிமாக இருப்பதால் அவன் இந்துக்களுக்கோ பிற மதத்தவர்களுக்கோ விரோதம் பாராட்டக்கூடாது. இந்த எளிய விசயத்தை ஔரங்கஸேப் உணரவில்லை என்கிறார். மேலும் பேகம் வாழ்க்கை மீதுள்ள பார்வையை மிக அழகாக எடுத்துச் சொல்கிறார்.. இந்த நாவலில் ஜஹானாரா பேகம் வரும் இடம் ஓர் ஆன்மிக அதிர்வை கொடுக்கும் என்பேன்

மொகாலயர்களின் வீழ்ச்சி வரை ஔரங்கஸேப் பேசி முடிக்கிறார். இப்படியொரு நாவலை எழுதி முடிக்க சாருநிவேதிதா கொட்டியிருக்கும் உழைப்பிற்கு எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் தகும். இந்நூலுக்காக அவர் வாசித்துள்ள நூல்களின் லிஸ்டே ரொம்பப் பெருசு.

ஔரங்ஸேப் குற்றங்கள் நிறைய செய்திருந்தாலும், எல்லாப்பழியையும் அவர் மேல் ஏற்ற முடியாது என்று நாவல் சுட்டிமுடிக்க, ஔரங்கஸேப் தான் செய்தது வாழ்நாள் தவறுதான் என்று ஒப்புதல் கொடுக்கிறார் என்றும் நாவல் நமக்குள் பதிகிறது..(வாழ்வின் இறுதிக்காலத்தில் தூக்கமின்றி குற்றவுணர்ச்சிகளை சுமந்து வாழ்வது கோடி நரகத்திற்கு சமம் என்பதை ஔரங்கஸேப்-ன் கடைசி காலம் சொல்கிறது)

எந்த மனிதரிடமும் இரு பக்கம் இருக்கும் எனச் சொல்லிருக்கும் சாரு அங்கிள் தமிழீழ தலைவர் பிரபாகரனை மட்டும் ஏன் இத்தனை வன்மத்தோடு இந்த நாவலில் அணுகியுள்ளார் என்று தெரியவில்லை..ஈழப்போரில் மக்கள் செத்து மடிந்ததிற்கு ஒற்றைக் காரணம் பிரபாகரன் மட்டுமே என்று கூறிச்செல்கிறார். அதற்கான சான்றுகளையும் தொடுத்துள்ளார். சில சான்றுகள் உண்மையாகவே இருக்கட்டும். அந்தச் சான்றுகள் மட்டுமே எல்லாவற்றுக்கும் சான்றாக முடியுமா? ஔரங்கஸேப்பை ஏற்றுக்கொள்ளும் சாருநிவேதிதா ஏன் பிரபாகரன் அவர்களை இப்படிப் புறந்தள்ளியிருக்கிறார். போரை விரும்பாத மக்களை வெந்தழலில் தள்ளியதாக, இந்நாவலுக்கு சம்பந்தமே இல்லாத இடத்தில் பிரபாகரன் அவர்களை உள்ளிழுத்து குற்றம் சுமர்த்தியுள்ளார் சாரு.. பேராசான் ஜெயமோகன் தடம் இதழில் வெளிவந்த ஒரு பேட்டியில், “ஈழத்தில் போர் நடந்து மக்கள் மடிந்ததை எவ்வித வலியுணர்வுமின்றி கடந்து சென்றிருப்பார். ஜெயமோகனுக்குள் வெளிப்படாமல் இருக்கும் வார்த்தைகளை சாரு நிவேதிதா எழுதியிருப்பதாகவும் தோன்றுகிறது. சாரு நிவேதிதாவிற்கு ஜெயமோகன் சமீபத்தில் விஷ்ணுபுரம் விருது வழங்கியதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன். நார்வே ஒப்பந்தத்தை தனது சுயநலத்தால் பிரபாகரன் ஏற்றுக்கொள்ளவில்லை. தன் சர்வதிகாரத்திற்கு மாற்றாக இருக்கும் விசயங்கள் எதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை அது மக்களைப் பாதித்தாலும் பரவாயில்லை என்ற மனநிலை கொண்டவர் பிரபாகர் என்கிறார் சாரு அங்கிள். இதற்கு மேல் இதைப்பற்றி பேசினால் என்னை கொன்று விடுவார்கள் என்று தமிழீழ ஆதரவாளர்களை ஒரு எள்ளல் வேறு செய்கிறார். மிக மிக வருத்தங்கள். தமிழீழ பிரச்சனையில் பிரபாகரன் மீது நிச்சயமாக விமர்சனம் இருக்கும் தான். ஆனால் கொஞ்சமேனும் கருணை இல்லா ஒரு தலைவனாக இந்நாவல் அவரை கட்டமைத்துள்ளது வேதனை அளிக்கிறது..So sad

மற்றபடி மொகாலயர்களின் சரித்திரத்தையும் ஔரங்கஸேப் குறித்த மாற்றுப்பார்வைகளையும் நமக்குள் ஏற்படுத்தி நல்லதொரு விவாதத்தை ஏற்படுத்தும் நூல் இது

இத்தனை ரத்தங்களும், யுத்தங்களும் மொத்தத்தில் மண்ணாகிப் போகும் இந்த வாழ்வில் என்னத்திற்கு? என்ற தரிசனம் நூலை மூடி வைத்ததும் தோன்றியது. கூடவே நபிகளாரின் வாசகம் ஒன்றும்

“கல்லறையில் உறங்கும் மனிதனைப் போலிரு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *