ஆஹா ரசிகன்
‘நாடி நரம்பு எல்லாம் சினிமா நடிகர்கள் மீதான அவதானிப்பும் ரசிக மனோபாவமும் ஊறிப்போனவர்’ எழுதியுள்ள நூல் எனச் சொல்லுமளவில் நூலெங்கும் அப்படியொரு ஆற்றல்
அதி தீவிர ரசிக மனோபாவம் ஏற்படுத்தும் உளவியலை கூட நூலாசிரியர் தொட்டுள்ளார். தியாகராஜ பாகவதரிலிருந்து சிவகார்த்திகேயன் வரை உச்சம் தொட்ட நடிகர்களை, அவர்களின் கரியர் ஏற்ற இறக்கங்களை மிகச்சிறப்பாக அலசியுள்ளார் பால கணேசன். நூலின் முன்னுரையில், இயக்குநர் ரவிக்குமார் சொன்னது போல, “கருப்பு வெள்ளை கால சினிமாவிற்குள் சென்று வந்த உணர்வைத் தந்தது புத்தகம். அதற்கு சரசரவென பாய்ந்து செல்லும் எழுத்து நடையும் ஒரு காரணம்
பாடுவதன் மூலம் தன்னை ஹீரோவாக நிலை நிறுத்திய பாகவதர், சண்டைக் காட்சிகள் மூலம் பெயர் பெற்ற பி.யூ சின்னப்பா இருவரின் இரு துருவ நடிக நிலைகளை விவரித்து, அப்படியே எம்.ஜி.ஆர் சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் சிம்பு தனுஷ் வரை பட்டிலியிட்டுள்ளார் பால கணேசன்
நூலில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் முதல் இரு உச்ச நட்சத்திரங்கள், தவிர்த்து, மூன்றாமிட நடிகர்களைப் பற்றிய ஹிஸ்ட்ரி. பாகவதர் காலத்தில், எம்.கே ராதா ரஞ்சன், எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் ஜெமினி கணேசன், ரஜினி கமல் காலத்தில் விஜயகாந்த், விஜய் அஜித் காலத்தில் விக்ரம், சூர்யா
என இந்த மூன்றாமிட நடிகர்கள் பற்றிய அலசல் துல்லியமாக இருந்தது..எஸ்.எஸ். வாசன் தயாரித்த சந்திரலேகா படம் பற்றிய தகவல்கள் அட்டகாசம்.
சதீலீலாவதி படத்தில் எம்.ஜி.ஆரை நடிகனாக்கிய எஸ்.எஸ் வாசன் மீதுதான் எம்.ஜி.ஆர் பின்னாளில் வழக்குப் போடுகிறார் ஆனந்தவிகடனின் வந்த கார்ட்டூனுக்காக😃
நேருக்கு நேர் வாதத்தில் மோதிக்கொண்ட ரஜினி கமல் சண்டையில் இருந்த உணர்வும் குறைந்த பட்ச ஆரோக்கியமும், இணையம் மூலம் நடக்கும் விஜய் அஜித் சண்டையில் துளியுமில்லை என்பது சத்திய உண்மை. ரசிகனால் நடிகன் ஜெயித்ததும், தோற்றதும், திருந்தியதும், வருந்தியதும் உண்டு. அதேபோல் நடிகனால் ரசிகன் எந்த நிலையை அடைந்துள்ளான்? என்ற கேள்விக்கு இன்று நல்ல பதில் இல்லை என்பது சோகம்
எம்.ஜி.ஆர் உச்சம் தொடும் போது பாகவதர் பீல்டில் இல்லை. ரஜினி சூப்பர் ஸ்டார் ஆகும்போது ர்ம்.ஜி.ஆர் முதல்வர். ரஜினி கமல் யுத்தம் ஓரளவு முடிவிற்கு வந்த பிறகே விஜய் அஜித் யுத்தம் துவங்கியது
ஆனால் 2021-க்குப் பின் அந்த யுத்தம் ரஜினி விஜய் என்று திரும்பியது யாரும் யோசிக்காத கணக்கு. இதுதான் ரூல் என விதிக்க முடியாத விந்தை கொண்டது வாழ்வு. இந்த நூல் 2020-லே வெளியானதால் இந்த மேட்டரை தொடவில்லை போல
“விஜய்க்கும் எனக்கும் போட்டியில்லை” என்று ரஜினி சொல்லும் அளவு விஜய் வளர்ந்ததும், அல்லது விஜய்யின் 50-வயதில் கூட ரஜினி களத்தில் நிற்பதும் எந்த ரசிகனும் நினைத்திடாத ஒன்று தான்
சினிமாவிற்குள் மட்டும் தானே நினைத்தை நடத்த முடியும். கேமராவுக்கு வெளியே அப்படியல்ல தானே!
நல்ல நூல் நல்ல வாசிப்பனுபவம்

