இறுதி முயற்சி- விமர்சனம்

“கடன் பட்டான் நெஞ்சம் போல் கலங்கி நின்றான்” என்றொரு முதுமொழி உண்டு. அதாவது எத்துயருக்கும் மேலானது கடன் படும் துயர் என்பதே பொருள். அதையே கதைப்பொருளாக கொண்டுள்ளது இறுதி முயற்சி

ரஞ்சித் தனது தொழிலில் பெரும் பின்னடவைச் சந்திக்கிறார். மேலும் தனது மகனின் ஆபரேசனுக்காகவும் பணம் தேவைப்படுகிறது. அதனால் அதிக வட்டிக்கு விடும் ஒருவரிடம் கடன் வாங்குகிறார். கடனை திருப்பித் தராவிட்டால் கடனாளியின் வீட்டுப்பெண்களை கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்பவர் கடன் கொடுத்தவர். இதைத் தெரிந்தும் கடன் வாங்கிய ரஞ்சித், வாங்கிய கடனிலிருந்து மீண்டாரா என்பதே படத்தின் கதை. அடிஷ்னலாக ஒரு சைக்கோ பற்றிய கதையும் படத்திலுண்டு

கதையின் நாயகனாக ஆடியன்ஸின் ஒட்டுமொத்த பரிதாபத்தையும் வாங்கிக்கொள்கிறார் ரஞ்சித். நடிகராக அவருக்கு நல்ல அடையாளம் இந்தப்படம். நாயகி மெகாலி மீனாக்ஷி கொடுத்த வேலைக்கு குறை வைக்காமல் நடித்துள்ளார். குறிப்பாக மிகவும் அழகாக இருக்கிறார். நீலேஷ், விட்டல் ராவ், கதிரவன் உள்ளிட்ட ஏனைய கேரக்டர்களும் கவனம் ஈர்க்கும்படி நடித்துள்ளனர்.

சூர்யகாந்தி தனக்கு வழங்கப்பட்ட பட்ஜெட் வரம்பிற்குள் தன் ஒளிப்பதிவு திறனைக் காட்டியுள்ளார். சுனில் லாசர் பின்னணி இசையில் காட்டிய கவனத்தை பாடல்களிலும் காட்டியிருக்கலாம்

திரைக்கதையை விட கதை மிக முக்கியம் என நினைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் ஜனா. அதனால் ஆங்காங்கே திரைக்கதையின் போதாமை தெரிகிறது. சின்னச் சின்னக் காட்சிகளில் இன்னுமே சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்க முடியும். சிற்சில தடுமாற்றங்கள் இருந்தாலும் “கடன் வாங்கினால் அதற்கு தீர்வு தற்கொலை அல்ல” என்பதை சீரிய முயற்சியோடு சொன்னதிற்காக இந்த இறுதி முயற்சியைப் பாராட்டலாம்
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *