ஆவி பறக்க நாக்கு ருசிக்க ஒரு எமோஷ்னல் இட்லி இது
தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் இட்லிகடை வைத்து வாழும் தனுஷின் அப்பாவான ராஜ்கிரண் தன் சிறிய இட்லிகடையை கோவில் போல் பாவிக்கிறார். ஆனால் தனுஷின் கனவுகள் பெரிதாக இருக்கிறது. ராஜ்கிரணின் முழு சம்மதமின்றியே பாங்காங் செல்கிறார் தனுஷ். அங்கு சத்யராஜ் நடத்தும் ஹோட்டல் பிசினெஸில் பெரிய பொறுப்பில் இருக்கிறார். சத்யராஜ் மகளான சாலினி பாண்டே தனுஷை காதலிக்கிறார். இந்தக் காதல் கல்யாணத்தை நோக்கி நகரும் போது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய சூழல் தனுஷுக்கு நேர்கிறது. ஊர் சென்றபின் தனுஷ் பாங்காங் திரும்ப மறுக்கிறார். அதன்பின் சிலபல பிரச்சனைகள் வெடிக்க முடிவில் எல்லாம் சுபம்
படத்தின் இயக்குநராக தனுஷ் இருப்பதால் அவர் கேரக்டருக்கான ரைட்டிங்கில் நல்ல அழுத்தம் கொடுத்து எழுதியுள்ளார். அதை தன் நடிப்பிலும் பதிய வைத்துள்ளார். அருண்விஜய் தேவையான வில்லனத்தைக் காட்டி ரசிக்க வைக்கிறார். சத்யராஜ் நல்ல மனிதராக இருந்தாலும் மகனுக்காக சுயநல முடிவு எடுக்குமிடத்தில் தன் திறமையான நடிப்பை முன் வைக்கிறார். நித்யாமேனென் தரமான நடிப்பை வழங்க, பார்த்திபன் கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்கிறார். சாலினி பாண்டே நல்லதொரு தேர்வு. சமுத்திரக்கனி நக்கல் பிடித்த கேரக்டரில் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார்
கிரண் கெளரியின் ஒளிப்பதிவு படத்தை நேர்த்தியாக ரசிக்க வைக்கிறது. ஜிவி பிரகாஷ் பாடல்கள் பின்னணி இசை இரண்டிலும் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். சிறப்பாக அட்வுபுட் கிடைத்துள்ளது
படத்தில் மெலிதான உணர்வுகளை மீட்டும் படி காட்சிகளை அமைத்து கவனிக்க வைத்துள்ளார் இயக்குநர் தனுஷ். வசனங்களிலும் அவ்வளவு அடர்த்தி. பின்பாதியில் அருண்விஜய் போர்ஷனில் சற்று நெருடல் இருந்தாலும், அவர் கேரக்டருக்கான பினிஷிங்-ஐ தரமாக அமைத்துள்ளார் தனுஷ். குலதெய்வ வழிபாடு, பழமை போற்றுதல், ஊர் உறவுகளின் முக்கியத்துவம், மென்மை பேணும் காந்தியம் என மனித வாழ்விற்கு தேவையான அத்தனை அம்சங்களையும் தேனிக்கு அழைத்துச் சென்று இட்லிகடை மூலமாக காட்டுகிறார் தனுஷ்
வழக்கமான சொல்லாடல் தான். ஆனால் பொருத்தமாக இருக்கும்
இது குடும்பங்கள் கொண்டாட வேண்டிய படம்
4/5
-வெண்பா தமிழ்

