அக்னி குஞ்சுக்கும் அணில் குஞ்சுக்கும் சம்பந்தம் இருக்கான்னா இல்ல. LCU-க்கும் ICU-க்கும் சம்பந்தம் இருக்கான்னா இல்ல
பெறவு எதற்கு இந்த சொலவடைன்னு கேட்டா, இந்தப் படத்திற்கு எதற்கு நாகார்ஜுனான்னு நாங்களும் கேட்போம்.
கறி வெட்டுற இரண்டு கத்திகளோடு அறிமுகம் ஆகிறார் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மேன்சன் நடத்தும் அவர் வாழ்வுக்கும், நான்சென்ஸ் வாழ்வு வாழும் நாகார்ஜுனா டீமிற்கும் உருவாகும் காலி பஞ்சாயத்து தான் இந்தக் கூலி. பலிக்குப் பலி வலிக்கு வலி என்றும் இந்தப் படத்தின் ஒன்லைனை Fun லைனாகச் சுட்ட முடியும்
75 வயது நிரம்பியும் நிறைகுடம் போல் ததும்பாமல் அசத்துகிறார் ரஜினி. நிச்சயமாக உலகிலே ஆசீர்வாதிக்கப்பட்ட ஒரே ஹீரோ ரஜினி என்பதை வாழும் வரலாறும் வருங்கால வரலாறும் ஒத்துக்கொண்டே தீரும். எலும்பு தெறிக்கும் சண்டைக்காட்சிகளிலும், மனதை உடைக்கும் (நமக்கு உடையல) எமோஷ்னல் காட்சிகளிலும் அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறார். கூஸ்பம்ஸ் ஏரியாக்களை இன்னும் வைத்திருக்கலாம். உபேந்திரா உள்பட உப கேரக்டர்கள் பலரும் படத்தில் நமக்கு போலவே அவர்களுக்கும் தெரியாமல் வந்து போகிறார்கள். கிடைத்த அற்புசொற்ப காட்சிகளில் ஆண்டவரின் புதல்வி நடிப்பில் தாண்டவமாடி கலங்கடிக்கிறார். மஞ்சும்மல் பாய் ஆன மலையாள நடிகர் செளபின் மட்டும் கெளபாய் ஜெய்சங்கர் போல மனதில் நிற்கிறார். கிரேட் ஆக்டிங் சாரே. காளிவெங்கட் ரேஞ்சை விட சற்று அதிக ரேஞ்சில் வருகிறார் சத்யராஜ். அமீர்கான் விலையுயர்ந்த புகையை பிடித்தபடியே என்ட்ரி ஆகிறார். பீடி குடித்தபடியே எக்ஸிட் ஆகிறார். எதோ குறியீடு இருக்கும் போல. டீ கோட்டாளர்களுக்கான ஏரியா அது
இது விஜய் படம் இல்ல. ஆனா ரஜினி நடித்த விஜய் படம் மாதிரி தெரியணும் என முடிவெடுத்து கிரிஷ் கெங்காதரன் ஷாட் வைத்திருக்கிறார் போல. But தப்பா இல்ல. என்ன ஒன்னு ரஜினியின் வரலாறு தெரியாத ஈராயிரக்குழவிகள் (2K kids) ரஜினி விஜய் மாதிரி பண்றார்னு சொல்லிப்பிடுவாங்க. எடிட்டர் பிலோமீன் படம் பார்க்கும் ஆடியன்ஸை போலவே சற்று மந்தநிலையில் இருந்திருப்பார் போல. இடைவேளை வந்தபிறகும் படம் ஓடுகிறது. க்ளைமாக்ஸ் நொந்தபிறகும் படம் ஓடுகிறது
அன்பறிவ் ஸ்டண்ட் கொரியாகிராபி படத்தில் மாஸ் மெட்டிரியல்
படத்தின் மையக் கதாப்பாத்திரம் நம்மை கைப்பிடித்து அவரோடு அழைத்துச் சென்றால் தான் படம் கனெக்ட் ஆகும். அந்த ஏரியாவில் ரைட்டிங் டீம் மொத்தமாக கோட்டை விட்டுள்ளது. யார் யாரை எதற்கு கொலை செய்கிறார்கள் என்பதை இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கலாம். வெறும் ப்ரேமிங்காலும், அனிருத்தின் இசையாலும் ரசிகர்களை கவர்ந்திழுக்க முடியும் என்ற லோகேஷின் நம்பிக்கைக்கு இந்தப் படம் ஒரு பாடம் கற்றுக்கொடுக்கும். அனிருத் வழக்கம் போல தனது ரஜினியிசத்தைச் செய்துள்ளார்.
சொல்ல மறந்து போயிற்று! மோனிகா பாடலும் அதற்கு பூஜாவின் பாத அசைவுகளும் தாக தரிசனம்
கூலி- செய்கூலி இல்லை. But சேதாரம் உண்டு
-வெண்பா தமிழ்
2.5/5
#Coolie

