சாதியவாதம் நாளுக்கு நாள் தலைதூக்கி வரும் இக்காலத்தில் நாளை நமதே ஒரு முக்கியமான படமாக வந்துள்ளது
சிவசங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்கச் சாதியினரும் ஒடுக்கப்பட்ட மக்களும் வாழ்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் அந்த ஊர் அடங்கிய தொகுதியை ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கிறது அரசு. கொதித்தெழும் ஆதிக்கச் சாதியினர் பெரும் வன்முறையை கட்டவிழ்க்கிறார்கள். அதன்பின் காலம் கடக்கிறது. இதே பிரச்சனை மீண்டும் வருகிறது. கதையின் நாயகியான அமுதா போல்டாக தேர்தலில் நிற்கத் துணிகிறார். ஆதிக்கச் சாதியினரை படிப்பு சட்டம் இரண்டின் மூலமாக எதிர்க்கிறார் அமுதா. முடிவில் அவரின் போராட்டம் வென்றதா? என்பதே கதை
படம் நெடுக புதுமுகங்கள் தான் வருகிறார்கள். அவர்களது நடிப்பு மிக எதார்த்தமாக அமைந்துள்ளது. கதையின் நாயகி அமுதாவாக வாழ்ந்துள்ளார். அடிமையாக வாழ்வதை விட, வீரம் மிகுந்த பெண்ணாக மடிந்தாலும் பரவாயில்லை என்று அவர் சீறும் காட்சிகள் எல்லாம் அபாரம். சின்னச் சின்ன கேரக்டர்களும் நன்றாக நடித்துள்ளனர்
படத்தின் இசை அமைப்பாளர் சத்தத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். பிரபாகர் குரலில் ஒலிக்கும் பாடல்கள் எல்லாம் பிரமாதமாக வந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் சிவசங்கை மாவட்டத்தை கண்முன் நிறுத்தியுள்ளார்
“படிச்சா திமிரு வராது அறிவு தான் வரும்” போன்ற வசனங்களை அழகாகப் புகுத்தியுள்ளார் இயக்குநர் வெண்பா கதிரேசன். சிலபல கமர்சியல் எலிமண்ட்ஸ்களையும் படத்தில் புகுத்தியிருப்பது ஓகே ரகம். பாலியல் சார்ந்த காமெடிகளை இன்னும் மெச்சூட் ஆக கையாண்டிருக்கலாம். கதையாக ஈர்த்த படத்தை திரைக்கதையாக ஈர்க்க வைத்திருக்கலாம். ஆயினும் நந்தன் படத்திற்குப் பிறகு ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சனையை தீரமாக அலசியதற்காகவும், அதற்கான தீர்வை முன் வைத்ததிற்காகவும் நாளை நமதே படத்தை வரவேற்க வேண்டும்
கல்வி தான் சட்டத்தை அறிமுகப்படுத்தும். சட்டம் தான் துணிவைத் தரும். துணிவு தான் அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்க வைக்கும். கேள்வி தான் நம்மை அதிகாரத்தை நோக்கி நகர்த்தும். இதை உணர்த்தும் படங்கள் இன்னும் வந்து கொண்டேயிருந்தால் நாளை நமதே
3.25/5
-வெண்பா தமிழ்

