தூத்துக்குடி அண்ணாச்சி.. திரைக்கதை என்னாச்சி? அப்டி கேட்குற மாதிரி தூத்துக்குடி அண்ணாச்சியான குகன் சக்கரவர்த்தியார் வங்காள விரிகுடா படத்தை எடுத்துள்ளார். But முதல்லே ஒரு விசயத்தைச் சொல்லிடுறோம்.. படம் உங்களை ஸ்பூப் மூவி ரேஞ்சில் ரசிக்க வைக்கும்
கதை? ஆங் ஆமால்ல! இதோ சொல்றோம்
அண்ணாச்சி குகன் சக்கரவர்த்தியார்க்கு ஒரு லவ் பெயலியர். அதற்கு காரணம் பொருள் இல்லாமை எனச் சொல்கிறார் அண்ணாச்சி. கட் செய்தால் அண்ணாச்சி பெரும் பணக்காரராக மாறுகிறார். ஆனாலும் அவரால் காதலியை மறக்க முடியவில்லை. இச்சூழலில் வேறோருவரை கல்யாணம் செய்த அண்ணாச்சியின் காதலி கல்யாணத்தோல்வியால் தற்கொலைக்கு முயல்கிறார். அண்ணாச்சி எக்ஸ் காதலியை காப்பாற்றி தன்னோடே “வைத்து” க்கொள்கிறார். அதன்பின் காதலியின் கணவனை தீர்த்துக்கட்டுகிறார். இதற்கிடையில் அண்ணாச்சியின் நண்பரின் மகள் அண்ணாச்சி மீது லவ்வாகி விடுகிறார். அந்தச் சின்னஞ்சிறு பெண்ணுக்கு புத்திமதி சொல்வார் நம்ம அண்ணாச்சி என்று பார்த்தால், அவர் நீதான் என் சந்திரமதி என்ற ரேஞ்சில் டயலாக் பேசி திருமணம் முடித்துக் கொள்கிறார். போதும்! இதற்கு மேலும் கதையைச் சொல்லணுமா என்ன?
படத்தில் நடிகராக குகன் சக்கரவர்த்தியார் கோபம்,மோகம், சோகம், தாகம், வேகம், விவேகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே உணர்வுகள் என நினைத்து நடித்துள்ளார். வாழ்த்துகள் அண்ணாச்சி.
(கீழே உள்ள பாராவை விஜய் மதுரை மாநாட்டில் பேசிய டோனில் வாசிக்கவும்)
படத்தில் ஒளிப்பதிவாளர் குகன் சக்கரவர்த்தியார், இசையமைப்பாளர் குகன் சக்கரவர்த்தியார், எடிட்டிங் குகன் சக்கரவர்த்தியார், ஆர்ட் வொர்க் குகன் சக்கரவர்த்தியார், தயாரிப்பு குகன் சக்கரவர்த்தியார், இயக்கம் குகன் சக்கரவர்த்தியார், மேக்கப் குகன் சக்கரவர்த்தியார், பாடல்கள் குகன் சக்கரவர்த்தியார் என படத்தில் எல்லாமே அவரின் முகமும் அகமும் புறமும் தான்
பாவம் குகன் சக்கரவர்த்தியார் கதை எழுதும் போது திரைக்கதையை மறந்துவிடுகிறார். திரைக்கதை எழுதும் போது கதையை மறந்துவிடுகிறார். வசனம் எழுதும் போது இரண்டையும் மறந்துவிடுகிறார். இசை அமைக்கும் போது பாடல்களை மறந்துவிடுகிறார். பாடல் எழுதும்போது உலகையே மறந்துவிடுகிறார். (கவிஞன் அவதாரமல்லவா)
இப்படி பலவற்றை அவர் மறந்தாலும் ஆங்காங்கே நம்மைச் சிரிக்க வைக்க அவர் மறக்கவில்லை🙏🙏 அந்தச் சிரிப்பு அர்த்தமற்றவை என்றாலும் கூட…ஒகே தான்
வங்காள விரிகுடா- பங்காளி பலிகடா
2/5
-வெண்பா தமிழ்

