மாய பிம்பம்- விமர்சனம்

“காமத்தின் நீட்சி தான் காதல்” என்றொரு வாக்கியம் உண்டு. அதை இல்லை என்று மறுத்துரைக்கிறது இந்த மாய பிம்பம்

நாயகி ஜானகியைச் சந்தித்ததும் காதல் கொள்கிறார் நாயகன் ஆகாஷ். அவருக்கு தன் காதலியின் காதல் எல்லை காமம் மட்டும் தானா? என்பதை சோதிக்க ஆசை. அந்த ஆசையைத் தூண்டியவர்கள் நண்பர்கள். அதனால் ஆகாஷ் தனிமையில் காதலியைச் சந்தித்து தன் காம வேட்கையை வெளிப்படுத்துகிறார். அங்கு ட்விஸ்ட் நிகழ்கிறது. அதன்பின் கீறல் விழும் காதல் கூடல் கொண்டதா என்பதே கதை

சிறிய படங்களை காப்பாற்றும் அம்சங்களில் முக்கியமான ஒன்று நடிகர்களின் பங்களிப்பு. அவ்வகையில் இப்படத்தின் கேரக்டர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அறிமுக ஹீரோ என்ற சுவடே தெரியாமல் அசத்தியுள்ளார் ஆகாஷ். நாயகி ஜானகி தேர்ந்த நடிப்பால் பல காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். நாயகனின் நண்பராக வரும் ஹரி ருத்ரன் உள்பட பிற கேரக்டர்களில் வரும் எல்லோருமே நல்ல நடிப்பிற்கு உத்திரவாதமளித்துள்ளனர்.

நந்தாவின் இசை மனதை ஆங்காங்கே இதமாக வருடுகிறது. பாடல்களையும் பின்னணி இசையையும் கதையின் போக்கை உணர்ந்து உருவாக்கியுள்ளார் நந்தா. ஒளிப்பதிவாளர் எட்வின் சாகை படத்தின் பெரும்பலம். பழைய ஒளிப்பதிவாளர்களை நினைவூட்டும் படி ஷாட்களை கம்போஸ் செய்துள்ளார்

எளிமையான கதை, சிறிய படம், புதிய நடிகர்கள் என நிறைய சவால்கள் இருந்தும் ஒரு நல்ல திரைக்கதையால் நம்மை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் இயக்குநர் கே.ஜே சுரேந்தர். சின்னச் சமரசங்கள் செய்ய வேண்டியிருந்தாலும், மாய பிம்பம் பல இடங்களில் மயக்கும் இன்பமாகவே உள்ளது
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *