நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைப் போராட்டத்தை சினிமாத்தனம் இன்றி நமக்குள் கடத்த முயற்சித்துள்ளார் இயக்குநர் கார்த்திக்கேயன் மணி
இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான காளிவெங்கட், பிள்ளைகள் தான் உலகம் என ஓயாது உழைத்து ஓடாக தேயும் மனிதர். அதே நேரம் தன் பிள்ளைகளுக்கு சரியான வாழ்வைத் தர முடியவில்லையே என்ற குறை அவருக்குள் ஒரு குற்றவுணர்ச்சியாய் இருக்கிறது. இதைப் புரிந்துகொள்ளாத மகளும் மகனும் அவருக்கு மன ரீதியாக சில அவமானங்களை ஏற்படுத்துகிறார்கள். இறுதியில் மகளும் மகனும் அப்பாவை தம் உள்ளத்தில் ஏந்திக்கொள்வதோடு படம் நிறைவை எட்டுகிறது. இந்தக் கதையைக் கேட்பதற்கு எதோ கிரிஞ்ச் டைப் ஆப் ஸ்டோரி மாதிரி தெரியலாம். ஆனால் இவற்றை பக்கா சினிமாவாக்கி ஜெயித்துள்ளார் இயக்குநர் கார்த்திக்கேயன் மணி
இன்றைய தேதியில் குணச்சித்திர நடிகர் ஒருவர் ஹீரோவாக மாறி கதையைத் தாங்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே ஆப்சனாக தமிழ்சினிமாவில் காளி வெங்கட் மட்டுமே இருக்கிறார். மனிதர் அப்பாவாக, அப்பாவியாக, கணவராக, உழைத்துத் தேயும் எளிய மனிதராக எல்லாக் கோணங்களிலும் நமக்குள் கனெக்ட் ஆகிறார். ஒரிரு காட்சியில் நம் கண்களுக்குள் நிறைகிறார் காளிவெங்கட். Fantastic காளி! மகளாக நடித்துள்ள ரோஷினி ஹரிபிரியன் இயலாமை மற்றும் ஏக்கத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் அசத்தியுள்ளார். மகனாக நடித்துள்ள விஷ்வா காட்டியிருக்கும் 2K kid பெர்பாமன்ஸ் அசுரத்தனம். மனைவி கேரக்டரில் வரும் ஷெல்லி நடிப்பும் கச்சிதம். சிறு சிறு கேரக்டர்களில் வரும் அனைவரையும் உயிரோட்டமாக எழுதியுள்ளார் இயக்குநர். உதாரணத்திற்கு ஒரு காட்சியில் மட்டும் வரும் பொற்கொடி கேரக்டரைச் சொல்லலாம். ஒரு காட்சி என்றாலும் அவரின் ஆட்டிட்யூட் அட்டகாசம். அடுத்து சாம்ஸ் கேரக்டரையும் சொல்ல வேண்டும். குறிப்பாக சாம்ஸின் யூனிக் நடிப்பு அப்ளாஸ் ரகம்
ஆனந்த் GK வின் ஒளிப்பதிவு படத்தில் எங்கேயும் துருத்தி நிற்கவில்லை. தரமான ஒளிப்பதிவைச் செய்துள்ளார். kC பாலசாரங்கனின் இசையில் பாடல்கள் கதையை மேம்படுத்தியுள்ளன. பின்னணி இசையிலும் உணர்வுகளைச் சரியாக கட்டமைத்துள்ளார்
படத்தின் கதை சொல்லி ரைட்டராக வரும் சத்யராஜ், நடுத்தர வர்க்கத்தினரின் கதையில் என்ன அட்வெஞ்சர் இருக்குப் போது என்று அலுத்துக்கொள்வார். பின் அவரே நடுத்தர வர்க்கத்தின் வாழ்வே பெரும் அட்வெஞ்சர் தான் என உணர்வார். படம் சொல்லியிருப்பதும் இதுதான். நடுத்தர வர்க்கம் தழைக்க வேண்டுமானால் நிச்சயமாக ஒரு தலைமுறை தலையாய கஷ்டத்தைச் சந்தித்தே ஆகவேண்டும். இன்று ஒரு இளைஞன் காஸ்ட்லியான புது பைக்கில் செல்கிறான் என்றால், அவனது அப்பா சைக்கிள் இன்றி சுற்றியிருக்க வேண்டும். ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு வசதிக்குப் பின்னால் ஒரு தலைமுறையின் பேருழைப்பும் பெரும் தியாகமும் இருக்கிறது என்பதை இன்ட்ரெஸ்டிங்கான திரைக்கதை வழியே சொன்னதில் தான் இந்த மெட்ராஸ் மேட்னி ஜெயித்துள்ளது. சத்யராஜ் கதை சொல்லும் காட்சிகள் படத்திற்கு அவ்வளவு முக்கியமாக தெரியவில்லை. படத்தின் முன்பாதியை இன்னும் தெளிவோடு அணுகியிருக்கலாம். இந்த இரண்டு குறைகளைத் தவிர, பெரு திருப்தியை அளிக்கிறது படம்
மெட்ராஸ் மேட்னி- வொர்த்து வாட்ச்
3.5/5
-வெண்பா தமிழ்

