கர- விமர்சனம்

கறைபடியாத மனம் கொண்ட ஒரு தந்தையின் ஆசையை கரை சேர்க்கத்துடிக்கும் ஒரு ராபின்ஹுட் நாயகனின் கதை இந்த கர

1990 கால கட்டத்தில் நடிகர் தனுஷ் ஒரு எம்.எல்.ஏ வீட்டில் திருடுகிறார். திருடிவிட்டு வெளியேறும் போது மாட்டவும் செய்கிறார். அதன்பின் காவலதிகாரி சுராஜ் வெஞ்சாரமுடுவிடமிருந்து தப்புகிறார். கட் செய்தால் ஆறுமாதம் கழித்து ஆந்திராவில் காதலியான மனைவி மமிதா பைஜுவோடு ஹோட்டலில் வேலை செய்கிறார். அங்கு வறுமை கழுத்தை நெரிக்கிறது. தன் 16-ஆவது வயதில் அப்பா கே.எஸ்.ரவிக்குமாரிடம் இருந்து பணத்தை எடுத்து வந்த தனுஷ் மனைவியை அழைத்துக்கொண்டு அப்பாவிடமே தஞ்சமடையச் செல்கிறார். அப்பா கே.எஸ்.ரவிக்குமார் இவரை ஏற்றுக்கொண்டாரா? கே.எஸ்.ரவிக்குமாருக்கு நேரும் பெரும் துயரை தனுஷ் ஆற்றுப்படுத்தினாரா? ஆகிய கேள்விகளுக்கு தன் திரைமொழி மூலம் பதில் சொல்கிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா

நடிகராக தனுஷ் மீண்டும் மகுடம் சூடிக்கொள்கிறார். குற்றவுணர்ச்சியால் கூனிக்குறுகும் காட்சிகளில் அவரின் நடிப்பு நம் நெஞ்சை அசைத்துப்பார்க்கிறது. கே.எஸ்.ரவிக்குமாருக்கு இப்படத்தில் வாழ்நாள் கேரக்டர்! மனிதர் பின்னியுள்ளார். கருணாஸ் தனுஷ் கூட்டணி இப்படத்திலும் சிக்ஸர் அடித்துள்ளது. கருணாஸ் பேங்க் காட்சி ஒன்றில் செம்மயாக ஸ்கோர் செய்துள்ளார். பேர்சொல்லும் படியான கேரக்டரை அழகாக செய்துள்ளார் பிரித்வி. மமிதா பைஜுக்கு இன்னுமே வெயிட்டேஜ் ஏத்தியிருக்கலாம். ஆனாலும் வந்த அளவில் அழகு சேர்த்துள்ளார். மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாதமுடுவின் முகபாவனையே பெரிய பெரிய பதட்டத்தை கடத்திவிடுகிறது. நடிகர் ஜெயராமின் அனுபவம் அவரது அபாரமான நடிப்பின் மூலம் வெளிப்பட்டுள்ளது. ரியாக்சன்களாலே தூள் பறத்துகிறார்.

தேனீஸ்வரர் தனது தரமான ஒளிப்பதிவால் காட்சிகளுக்கு வலிமை சேர்த்துள்ளார். 1990 காலகட்டத்திற்கான லைட்டிங்& கலரிங்-ஐ பக்காவாக செட் செய்துள்ளார். மறுக்கவே முடியாத உண்மை ஜிவி பிரகாஷ் தான் படத்தின் மற்றொரு ஹீரோ என்பது. அய்யா அய்யா பாடலும் கண்ணம்மா பாடலும் எமோஷ்னல் வைப்! பின்னணி இசை சொல்லவே வேண்டாம் தலைவன் மாஸ் பண்ணியிருக்கிறார்

எழுத்தாளர் ஆல்ஃப்ரெட் பிரகாஷ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜா இருவரின் வசனங்களும் திறமையான திரைக்கதையும் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு திரையரங்கிற்குள் வரு ம் ரசிகனுக்கு மரியாதை செய்துள்ளது. ஒரு சாதாரண மூட்டைத்தூக்கும் காட்சிக்கு கூட பின்பாதியில் கனெக்டிங் கொடுத்த விதம் முதல் நிறைய சர்ப்ரைஸ் செய்துள்ளது இந்த எழுத்துக்கூட்டணி! இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் மேக்கிங் நிச்சயமாக ராக்கிங்!

1990 காலகட்டங்களில் விவசாயிகளிடம் நிலப்பத்திரத்தை வாங்கி வைத்துக்கொண்டு, அவர்களிடம் டிராக்டரை கொடுத்து வட்டி வசூல் செய்த வங்கிகளின் அராஜகத்தை எல்லாம் அச்சு அசலாக ஆவணப்படுத்தியுள்ளது படம். தனக்கு தேவையானதை திருடுவதற்கும், தன்னுடைய பணத்தை தானே எடுத்துக்கொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக நியாயப்படுத்தியுள்ளார் இயக்குநர்.

எல்லாத்தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நல்லபடமாக கூடிவந்துள்ளது கர!

இந்த வார இறுதியை கர-யோடு உறுதி செய்யுங்கள்
4/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *