ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், ஏ. எம். ரத்தினம் வழங்க, பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு”. இப்படத்தை இயக்குநர் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், பாபி டியோல், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஆஸ்கார் விருது பெற்ற எம் .எம். கீரவாணி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகியுள்ள இப்படம் வரும் ஜூன் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் 3-வது பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத் நகரில் நட்சத்திர ஹோட்டலில் நேற்றைய தினம் இந்தியா முழுவதிலும் வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அசுர ஹானம்.. என்ற வரிகளுடன் தொடங்கும் உணர்ச்சிபூர்வமான பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம், இயக்குனர் ஏ எம் ஜோதி கிருஷ்ணா, இசையமைப்பாளர் கீரவாணி, நடிகை நிதி அகர்வால், தெலுங்கு நடிகர்கள், மற்றும் கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கதாநாயகி நிதி அகர்வால் பேசும் போது,
எனக்கு மிகவும் சவாலான படமாக ஹரிஹர வீர மல்லு படம் இருந்தது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இதற்காக மட்டும் தேதிகளை ஒதுக்கி நடித்துள்ளேன். அதற்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு அதிகமாக இருந்தது. பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர்களுடன் நடித்தது என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட். அவ்வளவு அற்புதமான நடிகர், நல்ல கோ ஸ்டார். மனித நேயம் மிக்கவர். இந்த படம் வெளியான பிறகு என்னை தேடி பல வாய்ப்புகள் நிச்சயம் வரும். தமிழிலும் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது விரைவில் தமிழ்த் திரையுலகிளும் என்னை பார்க்கலாம் என்றார்.

