குற்றங்களும் அவை சார்ந்த விசாரணையும் தான் சென்னை பைல்ஸ் முதல் பக்கம்
ஹீரோ வெற்றியின் அப்பா பெரிய க்ரைம் நாவலிஸ்ட். அவரைப் பற்றி ஒரு தொடர் எழுதுவதற்காக ஷில்பா மஞ்சுநாத்-ஐ அவர் வேலை செய்யும் பத்திரிகை நிர்வாகம் நியமிக்கிறது. வெற்றி அவரது அப்பாவைப் பற்றிய தகவல்களைச் சொல்வதற்காக சென்னை வருகிறார். வந்த இடத்தில் பிக்பாக்கெட் அடிக்கும் கிங்ஸ்ட்லி மூலமாக சென்னையில் சூளைமேடு போலீஸ்டேசன் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவுடன் அவருக்கு தொடர்பு ஏற்படுகிறது. அந்தத் தொடர்பு நட்பாக மாறுகிறது. சில குற்றங்களை கண்டுபிடிக்க தம்பி ராமையாவிற்கு வெற்றி உதவுகிறார். அச்சூழலில் சென்னையில் நடந்து வரும் தொடர் கொலைகளை கண்டுபிடிக்கவும் வெற்றி உதவுகிறார். அந்த உதவிகளின் எல்லை என்ன என்பதாக விரிகிறது படத்தின் திரைக்கதை
வெற்றி இந்தப்படத்திலும் முழுமையான நடிப்பை வழங்கவில்லை. திரையில் அவர் கதாப்பாத்திரமாக மாறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார். ஷில்பா மஞ்சுநாத் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளார். தம்பி ராமையா காமெடி எமோஷ்னல் இரண்டு உணர்வுகளையும் சரியாக கடத்தியுள்ளார். ரெடின் கிங்ஸ்ட்லி வரும் சில காட்சிகளில் சிரிப்பு வரவில்லை என்பது சோகம். வில்லனாக வருபவரும் செயற்கையான நடிப்பையே தந்துள்ளார்
படத்தில் இசை பெரிதாக ரோல்ப்ளே செய்திருக்க வேண்டும். அது ஒகே வாக மட்டுமே மிஞ்சுகிறது. ஒளிப்பதிவாளர் இயல்பான ப்ரேமிங்ஸை வைத்து விஷுவல்ஸை சிறப்பாக்கியுள்ளார்.
போலீஸ்டேசனுக்கு ஹெல்ப் பண்ணுவதை எதோ பேச்சுலர் ரூமில் இருக்கும் பிரண்ட்க்குச் செய்வதைப் போல வெற்றி செய்கிறார். அந்தக் காட்சிகளில் லாஜிக் என்பது மருந்துக்குமில்லை. படத்தை விறுவிறுப்பாக நகர்த்தினால் மட்டும் போதும் என்று இயக்குநர் நினைத்துவிட்டார். படத்தோடு நாம் ஒன்றுவதற்கான ரசவாதத்தை இயக்குநர் திரைக்கதையில் நிகழ்த்தவில்லை. திரைக்கதையில் சில பக்கங்கள் மட்டுமே பாசிட்டிவாக இருப்பதால் கடைசிப் பக்கம் வரை கடக்கும் ஆர்வத்தை இழக்க வைத்துவிடுகிறது இந்த முதல் பக்கம்
2.25/5
-வெண்பா தமிழ்

