மெலிதான உணர்வுகளை மீட்டெடுக்கும் நல்ல நடிகர் அசோக்செல்வன். அவர் நடித்து தயாரித்துள்ள அன்பில் அவன் படம் சென்றவாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுகிறது. படத்திற்கு நல்ல பாதையை அமைத்துக் கொடுத்த ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிப்பு விழாவை நடத்தினார் அசோக்செல்வன்.
அந்த விழாவில் அவர் பேசியதாவது:
“இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய மக்களுக்கு முதலில் நன்றி. ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட படங்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவுதான் எனக்கு மிகப்பெரிய பலம். அந்த வரிசையில் ‘அன்பில் அவன்’ படத்தையும் பார்க்கிறேன். காதல் கதையாகத் தொடங்கி, த்ரில்லர், ஆக்ஷன் எனப் பல ஜானர்களில் பயணிக்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். படம் பார்த்துப் பலர் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறுகிறார்கள். இந்தப் படத்தில் சில குறைகள் இருக்கலாம். ஆனால், இதன் இதயமும் ஆன்மாவும் சரியான இடத்தில் இருப்பதாக நம்புகிறேன்.
படம் வெளியானது முதல் பத்திரிகை, ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. கடும் போட்டிகளுக்கு மத்தியில் வெளியானாலும், படம் தொடர்ந்து வளர்ந்து தற்போது லாபகரமான நிலையை எட்டியிருக்கிறது. இன்னும் பலர் இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். மற்றவர்களின் விமர்சனங்களை மட்டும் நம்பாமல், படத்தைப் பார்த்து உங்களுடைய கருத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். இந்தப் படம் பின்னாளில் இன்னும் அதிகமாகப் பேசப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகை ப்ரீத்தி முகுந்தன், இயக்குநர் கார்த்திகேயன், ஒளிப்பதிவாளர் கௌதம், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்துக்காக அனைவரும் முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறோம். எனது பெற்றோர், மனைவி மற்றும் குடும்பத்தினர் அளித்த ஆதரவும் முக்கியமானது. அபி உள்ளிட்ட தயாரிப்புக் குழுவினர், நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு தயாரிப்பாளராக இந்தப் படத்தின் மூலம் திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பளிக்க முடிந்தது எனக்குப் பெரிய மகிழ்ச்சி. நானும் சினிமாவுக்கு வருவதற்காகப் பல ஆடிஷன்களில் பங்கேற்றிருக்கிறேன். அதனால் திறமையானவர்களுக்குச் சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் இருந்தது. மஹா, கதிர், ஆகாஷ், பிரவீன், தீபன் உள்ளிட்ட பலருக்கு இந்தப் படம் நல்ல அடையாளத்தைத் தந்திருப்பதாக நம்புகிறேன். காதலின் ஆழத்தையும் உணர்வுகளையும் பேசும் இந்தப் படம், காதலிப்பவர்கள், காதலித்தவர்கள் எனப் பலருக்கும் நெருக்கமான அனுபவமாக இருக்கும். இன்னும் திரையரங்கில் பார்க்காதவர்கள் அவசியம் பார்த்து ஆதரவு தர வேண்டும்.” என்றார்.

