அன்பில் அவன்- விமர்சனம்

நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்யும் தம்பதிகளான ஹீரோ அசோக்செல்வன், ஹீரோயின் ப்ரீத்தி முகுந்தன் இருவரும் சந்திக்கும் இன்னல்களும் சவால்களும் தான் படம்

காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, எதிர்ப்பை மீறி திருமணம் செய்து வாழத்துவங்குகிறார்கள் நாயகனும் நாயகியும். இருவரும் ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்களுக்கு பனிச்சுமையும் அதிகம், அவமானத்தால் நேர்கிற மனச்சுமையும் அதிகம். அதனால் கடனை வாங்கியாவது ஊட்டியில் ஒரு ஹோம்ஸ்டே ஓட்டலை கட்ட வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். அங்கு ஓட்டல் துவங்கும் முன் அவர்களுக்கு நேரும் இன்னல்கள் அநேகம்! இருவரும் அவற்றை எப்படிக் கடந்து மேலெழுகிறார்கள் என்பதே படத்தின் கதை

அசோக்செல்வனுக்கு ஆக்சன் ஹீரோ இமேஜை இந்தப்படம் பெற்றுத்தரும். ஆக்சன் காட்சிகளில் அவ்வளவு நேர்த்தியாக பொருந்தியிருக்கிறார். ப்ரீத்தி முகுந்தனுக்கு இந்தப்படம் ஒரு தேர்ந்த நடிகை என்ற பெயரைப் பெற்றுத்தரும். பின்பாதியில் இன்னும் அவரை நன்றாக யூஸ் பண்ணியிருக்கலாம். மறைந்த நடிகர் டெல்லிகணேஷ் அவர்களின் மகன் மஹா இன்ஸ்பெக்டராக நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். அவருக்கும் நாயகிக்குமான காட்சிகளில் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். கதிர்பாலுவின் வில்லத்தனம் பக்கா. ரேவதி கேரக்டர் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

கோவிந்த் வசந்தாவின் இசை கவித்துவம் நிறைந்ததாக அமைந்துள்ளது. கெளதம் ராஜேந்திரனின் கேமரா சென்னை நிலத்தையும், ஊட்டி அழகையும் கச்சிதமாகப் பதிவு செய்துள்ளது

விக்னேஷ் ராஜாவின் கதையில் குழப்பமில்லை. திரைக்கதையிலும் குழப்பமில்லை. ஆனால் ஒரே மூடில் படம் செல்லவில்லை. முன்பாதியில் காதல் குடும்பம் வேலை என எதார்த்தமாக பயணிக்கும் படம் பின்பாதியில் ஆக்சன் மோடுக்கு மாறுகிறது. அந்த மூட் ஷிப்டிங்-ஐ நமது மனம் உடனே ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நல்ல மேக்கிங்-ஐ கொடுத்த இயக்குநர் ஆர்.கார்த்திக்கேயன் இன்னும் ஆழமான ஸ்டேட்ஜிங்-ஐ கொடுத்திருக்கலாம். கூடுதல் திரைக்கதை ஆசிரியர்களான விக்னேஷ் ராஜா, அசோக்செல்வன் இருவரும் இன்னும் உழைத்திருக்கலாம்

மிகச்சிறந்த படமாக வர வேண்டிய அன்பில் அவன் ஓரளவு நல்லபடம் என்ற நிலையில் நிற்கிறது
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *