மூன்று தேசிய விருதுகளை வென்றது ‘அமரன்’

நேற்று அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் அமரன் பெற்றிருக்கும் அங்கீகாரம் தயாரிப்பாளர்களுக்குப் பெருமை சேர்க்கும் தருணம். இது இந்தப் படத்தில் பங்களிப்பாற்றிய ஒவ்வொரு கலைஞர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த வெற்றி.

கமல் ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில் உருவான இந்தத் திரைப்படம், பின்வரும் முக்கிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது:

* சிறந்த இயக்குனர் – ராஜ்குமார் பெரியசாமி
* சிறந்த இசை அமைப்பு (பின்னணி இசை) – ஜி. வி. பிரகாஷ் குமார்
* சிறந்த படத்தொகுப்பாளர் (எடிட்டர்) – ஆர். கலைவாணன்

இந்த விருதுகள், அமரன் திரைப்படத்தை ஒரு மகத்தான காவியமாக மாற்றிய மூன்று கலைஞர்களின் அசாத்திய திறமையைக் கொண்டாடுகின்றன.

அசோகச் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டது. தாய்திரு நாட்டிற்காகத் தீரத்துடன் போராடிய இந்தியாவின் மிகச்சிறந்த ராணுவ வீரர்களில் ஒருவருக்குச் செலுத்தும் மரியாதையாக இப்படம் அமைந்துள்ளது. இதன் உணர்வுப்பூர்வமான கதை, வீரத்தையும் தியாகத்தையும் காட்டிய விதம் மற்றும் தொழில்நுட்பத் தரம் ஆகியவற்றுக்காக இது ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

திரு. கமல் ஹாசன் கூறியது:

“சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வென்ற ராஜ்குமார் பெரியசாமிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது தெளிவான இயக்கத்திற்கும் கதை சொல்லும் திறமைக்கும் கிடைத்த தகுதியான அங்கீகாரம் இது. சிறந்த பின்னணி இசைக்காக விருது வென்றிருக்கும் ஜி. வி. பிரகாஷ் குமாருக்கும், சிறந்த படத்தொகுப்பிற்காக விருது வென்றிருக்கும் ஆர். கலைவாணனுக்கும் எனது பாராட்டுகள். உங்களது உழைப்பு அமரன் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவிக்கு என் நன்றிகள். சில நடிப்புகள் விருதுகளையும் தாண்டியவை. அமரன் படத்திற்கு உண்மையான, அழகான மற்றும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்ததற்கு நன்றி. மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்காவாக நீங்கள் இருவரும் நடித்தது இந்திய சினிமா வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கும்.

அமரன் திரைப்படம் பெறும் ஒவ்வொரு விருதும் அங்கீகாரமும் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரத்தையும் தியாகத்தையும் என்றென்றும் அழியாமல் மாற்றுகிறது. கடந்த 46 ஆண்டுகளாக, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தரமான சினிமாக்களை ஆதரித்து வருகிறது. இந்தத் தேசிய விருதுகள், மகிழ்ச்சியையும் பெருமையை மட்டுமல்ல, உண்மையான இந்தியக் கதைகளைத் தரமாகச் சொல்வதில் எங்களுக்கிருக்கும் கடமையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

டர்மெரிக் மீடியா தயாரிப்பாளர் திரு. ஆர். மகேந்திரன் கூறியது:

“2016-ல், விஜய் டிவிக்காக ‘முதல் மரியாதை – சல்யூட் டூ த இந்தியன் ஆர்மி’ என்ற நிகழ்ச்சியைத் தயாரித்தபோது, மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை நான் முதன்முதலில் தெரிந்துகொண்டேன். அவரது வீரம், திருமதி. இந்துவின் அமைதியான மனவலிமை மற்றும் நம் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் செய்த தியாகங்கள் என் மனதை விட்டு நீங்கவே இல்லை.

ராணுவச் சீருடைக்கு பின்னால் இருக்கும் மனிதரைப் பற்றி ஒவ்வொரு இந்தியரும், முக்கியமாக ஒவ்வொரு குழந்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கதையை ‘அமரன்’ படம் மூலம் சொல்ல 2024-ல் முடிவு செய்தோம்.

அமரன் திரைப்படம் இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரமான மூன்று தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளது.

சில பயணங்கள் திரைப்படமாகத் தொடங்கும். ஆனால் சில பயணங்கள் நம் இதயத்திற்கு மிக நெருக்கமானதாக மாறும். அமரன் அப்படிப்பட்ட ஒரு பயணம். அமரன் குழுவை நினைத்து மிகவும் நெகிழ்ச்சியாகவும், நன்றியுடனும், பெருமையாகவும் இருக்கிறது.”

நேற்று அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருதுகள், சமீபத்தில் வெளியான மிகச்சிறந்த இந்தியப் படங்களுள் ஒன்றாக மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. தேசிய முக்கியத்துவமும், கலைநயமும் மிக்க திரைப்படங்களை உருவாக்குவதில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *