படம் டைட்டில் போலவே இருக்கிறதா?
குடியே மடி என சாய்ந்து கிடக்கும் ஹீரோ. அவரை காதலிக்கும் ஹீரோயின். ஹீரோவை அவரைச் சேர்ந்த எல்லோரும் திருந்து திருந்து எனச் சொல்கிறார்கள். ஹீரோவுக்கும் அவரது நண்பர்களுக்கும் குடியால் நிறைய இன்னல்கள் வருகின்றன. ஆனாலும் இந்த மதுபிரியர் மறுமலர்ச்சி கழகத்தினர் சரக்கை விட மாட்டேன்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்தியாவெங்கும் மதுவிலக்கு அமல் படுத்தப்படுகிறது. அதன்பின் இந்தக் குடி நோயாளிகள் என்னவானார்கள். முடிவில் படம் சொல்லும் மெசேஜ் என்ன என்பதே படத்தின் கதை
ஹீரோ ஹரிஷ் அழகுபாண்டியன் பார்க்க நமது பக்கத்து வீட்டுப்பையன் போலவே இருக்கிறார். நடிப்பும் இயல்பாக வருகிறது. ஹீரோயின் தனலெட்சுமி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். ஒருசில காட்சிகளில் தன் இருப்பை தக்க வைக்கிறார். கல்கி ராஜா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட இதர கேரக்டர்கள் ஓரளவு கவனம் ஈர்க்கிறார்கள்
இனியன் ஜே.ஹாரிஸ் தனது ஒளிப்பதிவை இன்னுமே செம்மைப் படுத்தியிருக்கலாம். இருப்பினும் கிடைத்த பட்ஜெட்டில் சிறப்பாகச் செய்துள்ளார். ஒரு காதல் பாடலை நன்றாக கம்போஸ் செய்துள்ளார் இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர். பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்
இயக்குநர் பிரபுராம் நல்ல கதைக்கருவை செலக்ட் செய்துள்ளார். வாழ்த்துகள். ஆனால் அந்தக்கதையை சிறந்த திரைக்கதையாக மாற்ற தவறியுள்ளார். இருப்பினும் படம் சொல்லும் மிக முக்கியமான மெசேஜ் சமூகநலன் சார்ந்தது என்பதால் இப்படத்தை நாம் வரவேற்கவேண்டும்
3/5
-வெண்பா தமிழ்

