தொடர்கொலைகளும், அதைத் தொட்டுப் படரும் விசாரணையும் தான் இந்தத் திரில்லர் படம்
இன்றைய தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள மேக்கரை தான் கதையின் களம். பெரும்பாலான கதை 2007-ஆம் ஆண்டில் நடக்கிறது. மேக்கரை அப்போது திருநெல்வேலி டிஸ்ட்டிக்கில் இருந்தது. மேக்கரையில் ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆண்கள் மட்டும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அப்படியான ஏழு ஆண்டு கொலை சீசனில் தான் ஹீரோ அந்த ஊருக்கு இன்ஸ்பெக்டராக தன் மனைவி குழந்தையோடு வருகிறார். அவர் வந்தபின்னும் தொடர் கொலைகள் நடக்கிறது. அதை ஹீரோ எப்படிக் கண்டுபிடித்தார் என்பது படத்தின் மீதிக்கதை
நாயகன் சித்து இன்னும் நடிப்பில் அதீத கவனம் செலுத்த வேண்டும். எல்லாக் காட்சிகளிலும் விரைப்பாக நிற்பது மட்டுமே நடிப்பு என நினைத்துவிட்டார் போல. எமோஷ்னல் காட்சிகளில் இன்னும் நல்ல நடிப்பை அவர் வழங்கியிருக்க வேண்டும். தர்ஷிகா அழகாக இருப்பதைப் போல அழகாகவும் நடித்துள்ளார். ரித்விகா தனது அனுபவத்தை நடிப்பாக மாற்றி அசத்தியுள்ளார். நிழல்கள் ரவி, ஜெயக்குமார் உள்ளிட்ட நடிகர்கள் ஸ்கோர் செய்துள்ளனர்
ஒளிப்பதிவாளர் மணிகண்டன் BK தான் இப்படத்தின் ஒரிஜினல் ஹீரோ. மனிதர் மேக்கரையில் படர்ந்திருக்கும் இருளின் அடர்த்தியை சிறப்பாக காட்டியுள்ளார். அவரின் எல்லாப் பிரேமிங்கும் சிறப்பு. இசையமைப்பாளர் சக்தி பாலாஜி படத்திற்கு தேவையான திரில்லிங்-ஐ தன் இசையால் கொடுத்துள்ளார்
தொடர் கிரைம் அது சார்ந்த விசாரணை, விசாரணையில் நிகழும் அடுத்தடுத்த திருப்பங்கள் என முன்பாதி படத்தை ரொம்பவே இன்ட்ரெஸ்டிங்காக கொடுத்திருந்தார் இயக்குநர் பாலாஜி. ஆனால் பின்பாதியில் கதை எங்கெங்கோ சுற்ற விடுகிறது. குறிப்பாக மெயின் கேரக்டர் மேல் நமக்கு எமோஷ்னல் பாண்டிங் வரவேயில்லை. மேலு ம் ஹீரோ கேரக்டர் ஸ்மாட்னெஸ் இன்றியே வடிவமைக்கப்பட்டுள்ளது. திரைக்கதை எழுத்தில் இன்னும் ஆழம் சேர்த்திருந்தால் படம் மிரட்டியிருக்கும். ஜஸ்ட் மிஸ்! திரில்லர் விரும்பிகள் ஒருமுறை பார்க்கலாம்
2.75/5
-வெண்பா தமிழ்

