கடவுள் இருந்தால் என்னப்பா.. இல்லன்னாலும் என்னப்பா? என வாழும் ஒருவன் முடிவில் கடவுளே கதியென கண்ணப்பா ஆகும் கதை இது
புராணத்தில் கண்ணப்பர் வரலாறு மிகவும் உணர்ச்சிப் பூர்வமானது. அதை மையப்படுத்தி இப்படத்தின் கதையை இயக்கியுள்ளார் இயக்குநர் முகேஷ் குமார் சிங்
வனப்பகுதி ஒன்றிற்கு சொந்தமான ஐந்து குழுக்கள் இருக்கின்றன. அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. அந்த வனப்பகுதியில் உள்ள வாயுலிங்கத்தை எடுத்துச் செல்ல ஒரு அரக்கர் குருப் வருகிறது. கடவுள் நம்பிக்கையே இல்லாத ஹீரோ இந்த ஐந்து இனக்குழுக்களையும் இணைத்து எப்படி அரக்கர் குலத்தை அழிக்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லாத அவர் எப்படி கடவுள் பக்தனாக மாறுகிறார் என்பதே படத்தின் திரைக்கதை
கதாநாயகனாக நடித்துள்ள விஷ்ணு மஞ்சு அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். க்ளைமாக்ஸில் இன்னும் அவர் உருகியிருக்கலாம். மோகன்பாபு சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார். நம்மூர் சரத்குமார் கம்பீரமாக நடித்து மனதில் பதிகிறார். சிறப்புத் தோற்றத்தில் வரும் அக்ஷயகுமார், காஜல் அகர்வால், பிரபாஸ், மோகன்லால் ஆகியோரில் பிரபாஸ் மட்டுமே கவனம் ஈர்க்கிறார். அவர் வரும் காட்சிகள் உயிரோட்டமாக எழுதப்பட்டுள்ளது. ப்ரீத்தி முகந்தன், அர்பித் ரங்கா, மதுபாலா, பிரம்மானந்தம், சம்பத் ராம் ஆகியோரும் படத்தில் இருக்கின்றனர்
பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே படத்திற்குப் பலம். உரையாடல் கூட திறம்பட எழுதப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு பெரிய பட்ஜெட் படம் என்பதைச் சொல்கிறது. CG பணி போதுமான நிறைவைத் தரவில்லை
முன்பாதியில் மிகவும் சாதா படமாக டீல் செய்யப்பட்டுள்ளது கண்ணப்பா. இரண்டாம் பாதி படம் தான் நம்மோடு கனெக்ட் ஆகிறது. திரைக்கதையின் அடிப்படைப் பிரச்சனையாக இருப்பது படத்தின் லேயர்கள் தான். இந்தப் படத்தின் ஒன்லைன் எது? கண்ணப்பர் வரலாறு மட்டுமா? அரக்கர் மற்றும் இனக்குழுக்கள் மோதலா? நரபலிக்கு எதிரான நகர்வா? நாத்திகன் எப்படி ஆத்திகன் ஆகிறான்? என்பதா என நிறைய குழப்பங்கள். இவற்றை எல்லாம் சரி செய்து ஒரு நேர்கோட்டில் மட்டும் படம் பயணித்திருந்தால் கண்ணப்பா அற்புதமான ஆன்மிக அனுபவத்தைத் தந்திருக்கும்
ஒரு நாத்திகனுக்குள் முளைக்கும் கேள்விகளுக்கு தர்க்க ரீதியாகவும், ஆன்மிக வழியாகவும் பதில் சொல்லி, அவன் மனதுக்குள் இறை சிந்தனை எப்படி படிப்படியாக வருகிறது என்பதை வைத்தே ஒரு ஆகச்சிறந்த பக்தி படத்தை வழங்கியிருக்கலாம்
கண்ணப்பர் வரலாற்றை முன்வைத்து பேசப்பட்ட “இறைவனுக்கு வேற்றுமை கிடையாது” என்ற விசயம் ஸ்ட்ராங்கானது. மேலும் இறைவனின் அம்சம் கொண்ட பிரபாஸ் பேசும் நாத்திக வசனங்களும் கூர்மை. நரபலியை எதிர்த்து ஹீரோ பேசுவதும் இன்றைக்கும் தேவையான ஒன்று. இப்படி நிறைய பாசிட்டிவ் அம்சங்கள் கொண்ட கண்ணப்பாவை என்னத்த கண்ணய்யா ரேஞ்சிற்கு எடுத்துள்ளனர்.
இரண்டாம் பாதியின் தத்துவ தரிசனத்திற்காக மட்டும் கண்ணப்பாவை வழிபடலாம்
3/5
-வெண்பா தமிழ்

