மர்ம வீட்டுக்குள் ஒரு திகில் அனுபவம்
படம் துவங்கியதும் ஒரு இளைஞன் தன் இரு நண்பர்களை கொன்றுவிட்டு தானும் தீக்கொளுத்திக் கொள்கிறான். இது நடப்பது 2021-ல். இப்படியான சம்பவம் நடந்த வீட்டிற்கு நான்குவருடம் கழித்து நாயகன் அஜய் கார்த்தி குடிவருகிறார். வீட்டின் உரிமையாளர் பாக்யராஜ் நடந்த விசயத்தைச் சொல்லியும் அவர் குடியிருக்கிறார். ஆனால் அவருக்கும் அங்கு ஓர் அசம்பாவிதம் நடந்துவிடுகிறது. இந்த மர்மங்களை துப்பு துலக்க காவல் அதிகாரியாக நட்டி வருகிறார். அவரின் விசாரணை மூலம் புலப்படும் அதிர்ச்சி நிறைந்த சம்பவங்கள் தான் படத்தின் மீதி திரைக்கதை
நாயகன் அஜய் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். புது நடிகர் என்ற சுவடின்றி நடித்துள்ளதை பாராட்டியே ஆகவேண்டும். நட்டி வழக்கமான நடிப்பையே கொடுத்துள்ளார். அஞ்சனா நெதுருன் இயல்பான நடிப்பால் கவர்கிறார். மறைந்த இயக்குநர் கே பாக்யராஜ் பரிதாபத்தை அள்ளுகிறார். விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்ரவர்த்தி, ஷாகுல் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் கொடுத்த வேலைக்கு குறைவைக்கவில்லை
மனு ரமேசன் இசையால் ஒரு பதட்டத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார். தொழில்நுட்ப ரீதியாக அவர் தனது பெஸ்ட்-ஐ கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரவிசக்தி ஒரு விட்டுக்குள்ளே பெரும்பாலான காட்சிகள் நகர்வதால் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளார். ஆனாலும் ஷாட்களில் வெரைட்டிக் காட்டி அசத்தியுள்ளார்
இயக்குநர் கல்யாண் கே ஜெகன் படத்தை பார்க்கும் போது நாம் பரபரப்பாக உணரவேண்டும் என சில முயற்சிகளை எடுத்துள்ளார். லாஜிக்கற்ற சீன்கள் இருந்தாலும் சில காட்சிகள் நம் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. படத்தை இரண்டு மணி நேரத்திற்குள் முடித்தது நல்ல பாசிட்டிவ் அம்சம். இயக்குநராக மேக்கிங்கில் காட்டிய அக்கறையை ரைட்டராக திரைக்கதையிலும் காட்டியிருந்தால் டார்க் நம்மை மிரள வைத்திருக்கும்
2.75/5
-வெண்பா தமிழ்

