பெண்களுக்கான வாழ்வியல் பாடம்
ராதிகா மதுரை மாவட்டத்திலுள்ள சிறு கிராமத்தில் வட்டிக்கு விட்டு சிற்றரசி போல வாழ்கிறார். நிறைய நகை சேர்த்து வைத்திருக்கும் அவர் திடீரென ஒரு நோயால் பாதிக்கப்படுகிறார். ஊரில் அவரிடம் பணம் வாங்கிய பலரும் அவர் சாக வேண்டும் என நினைக்கிறார்கள். அவரிடமுள்ள நகைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக மகன்கள் பால சரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ், மருமகன் முத்துக்குமார் ஆகியோர் ராதிகா பிழைக்க வேண்டும் என வேண்டுகின்றனர். முடிவில் ராதிகா மீண்டாரா.. நகைகள் யாருக்குச் சேர்ந்தது என்பதே படத்தின் கதை
படத்தின் கதாநாயகி கதையின் நாயகி என மாஸ் க்ளாஸ் இரண்டிலுமே ரவுண்டு கட்டி அடித்துள்ளார் ராதிகா. எமோஷ்னல் காமெடி என அவர் ஆடும் ஆட்டம் அவரது தண்டிட்டி போலவே அவ்வளவு சுவாரஸ்யம். நிச்சயமாக ஒரு கல்ட் க்ளாஸ் ஆக்டிங். பாலசரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ், முத்துக்குமார், முனிஷ்காந்த் ஆகிய ஐவருக்கும் பெரிய கேரக்டர். அசத்தியுள்ளார்கள். நடிகை ரேச்சல் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தியுள்ளார். அருமை அருமை. மூன்று மருமகள்கள், கருப்பசாமி கோவிலில் குடியிருக்கும் குடிகாரர், அவருக்கு அசிஸ்டெண்ட் ஆக வரும் சாமிநாதன் உள்பட படத்தில் வரும் குட்டி குட்டி கேரக்டர்களும் கவனிக்க வைக்கின்றனர். ஒரு அறிமுக இயக்குநர் இத்தனை மனிதர்களிடம் தத்ரூபமான நடிப்பை வாங்கியிருக்கிறார் என்பது பேராச்சர்யமாக இருக்கிறது
மதுரை கிராமங்களின் நிலப்பரப்பை துல்லியமாக காட்சிப்படுத்தி நம்மை ஊர் சுற்ற வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார். வெல்டன் வெல்டன். இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா வேறலெவல் ஆட்டமாடியுள்ளார். பைசனுக்குப் பிறகு அவரது இசைத்தாண்டவம் தாய்கிழவியிலும் தொடர்கிறது. சூப்பர் சாரே. எல்லாப்பாடல்களுமே கவனம் குவிக்கிறது
இயக்குநர் சிவக்குமார் முருகேசனுக்கு ஆகச்சிறப்பாக திரையில் கதை சொல்லும் லாவகம் வாய்த்துள்ளது. ஒவ்வொரு வசனங்களிலும் வெள்ளந்தி மனிதர்களின் உள்ளத்தை வெட்டி வைத்துள்ளார். ரத்தமும் சதையுமாக அந்த மக்களை திரையில் உலவவிட்டு புது சினிமா செய்துள்ளார். இந்தவருடத்தில் சில விருதுகள் அவருக்காக காத்திருக்கிறது. போகிற போக்கில் தெறிக்கும் பொலிட்டிகல் வசனங்களும், பொருளாதாரம் சார்ந்த புரிதலும் மாஸ் மெட்டிரியல் ரகம். பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு தெக்கத்தி கிழவி வாயிலாகச் சொல்ல வைத்ததில் இந்த தாய்கிழவி உயர்ந்து நிற்கிறாள்!
தாய்கிழவி- தமிழ்ச்சமூகத்தின் நம்பிக்கை
4.5/5
-வெண்பா தமிழ்

