நெஞ்சை பதற வைக்கும் ஒரு ஹாரர் திரில்லரை கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் விஜயகுமரன்
“வாழ்வில் மாறா இளமை பெற வேண்டுமானால் 100 ஆண்டுக்கொரு முறை பூக்கும் ஒரு பூவையும், அதனோடு இணைத்து மூன்று குழந்தைகளின் இதயத்தையும் திங்க வேண்டும்” என்ற குறிப்பு ஒன்றிருக்கிறது. அதை நம்பி இளமை பெற்று பின் வாழ்வை இழக்கிறான் ஒருவன். அவனின் மரணத்தின் போது அவன் விட்ட வாழ்வை தான் தொடர வேண்டும் என நினைக்கிறாள் கிழவியான அவனின் மனைவி. அதை நிறைவேற்றும் பொருட்டு கொடூர வேட்கை கொண்டு ஒரு ஒரு வீட்டிற்குள் செல்கிறாள் கிழவி. அங்கிருக்கும் குழந்தைகளின் இதயத்தைக் குறி வைக்கிறாள். அந்த தீயசக்தியின் எண்ணம் என்னவானது? என்பதே க்ராணியின் கதை
கொடூரத்தின் உச்சத்தை வெளிப்படுத்தும் கிழவியாக வடிவுக்கரசி நடித்துள்ளார். திரையைக் கிழித்துக் கொண்டு இந்தக் கிழவியை கொன்று விடுவோமா? என்று நமக்குத் தோன்றுமளவில் உள்ளது அவரது நடிப்பு. எஸ்.ஐ-ஆக வரும் திலீபன் கொடுக்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்துள்ளார். சிங்கம்புலி படத்திற்கு அவ்வப்பொது எனர்ஜி ஏற்றுகிறார். கஜராஜ் எதார்த்தமான நடிப்பை தந்துள்ளார். காது கேட்கும் திறன் குறைவுள்ள இரு குழந்தைகள் அசத்தியுள்ளனர். அக்குழந்தைகளின் பெற்றோரும் ஒகே ரகம்
மணிகண்டன் ஹாரர் படத்திற்கு ஏற்ற லைட்டிங்-ஐ செட் செய்து நல்ல ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் செல்லியா பாண்டியன் பரபரப்பை ஏற்றும்படி பின்னணி இசையை அமைத்துள்ளார். இருந்தும் பல இடங்களில் ஓவர் இரைச்சல்
சற்று மிகையான கதை என்றாலும் இரண்டாம் பாதியில் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது திரைக்கதை. இருந்தும் குழந்தைகளின் இதயத்தைத் தின்றல் என்ற கொடூர கற்பனையை செரிக்க இயலவில்லை. முதல்பாதி படம் ரொம்ப இழுவை. படத்தின் நீளத்தைச் சரியாக கணக்கிட்டவர்கள் திரைக்கதையில் இன்னும் ஆழத்தைச் சேர்த்திருக்கலாம். இரண்டாம் பாதியைச் சிறப்பாக திட்டமிட்டு உருவாக்கியுள்ளார் இயக்குநர். அதனால் க்ராணியை திராணியோடு எதிர்கொள்ளலாம்
3/5
-வெண்பா தமிழ்

