டூமச் என்ற சொல் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விசயத்திற்காகச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. நாயக பிம்பத்தை கொண்டாடுவதை டூமச் என்று சொல்வார்கள். ஆனால் அதையே பலமாக வைத்து தமிழகத்தில் அரசியல் நிகழ்வுகள் மாறிய வரலாறும் உண்டு. புரிதலில்லாத ஒரு காலத்தில் பெண்கள் அணியும் உடைகளை டூமச் என்றார்கள் இன்று அது மாறியுள்ளது. காதல் விவகாரங்களில் மட்டும் டூமச் மாறவில்லை என்றாலும், அங்கும் சிலபல ஏற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை. இயக்குநர் விக்னஷ் கார்த்திக் ஹாட்ஸ்பாட்டிற்குப் பின் 2மச் என சேர்த்ததாலே இவ்வளவு விளக்கம். சரி படம் எப்படி இருக்கு?
பிரியா பவானிசங்கர் ஒரு தயாரிப்பாளரிடம் மூன்று கதை சொல்கிறார். அந்தக் கதைகள் தான் படம்
ஒரு கதையில் இரு நடிகர்களை தெய்வமென கொண்டாடும் ரசிகர்களின் குடும்பத்தைக் கடத்துகிறார் ஒருவர். அவரின் டிமாண்ட் சம்பந்தப்பட்ட இரு நடிகர்களும் தன்னிடம் கான்பிரன்ஸ் கால் பேச வேண்டும் என்பதே! அட டிபரண்ட்ல?
அடுத்த கதையில் மகளின் பர்த்டே பார்ட்டி நடக்கிறது. அங்கு விநோத உடை அணிந்துவரும் அப்பா சில அதிர்ச்சிகளை கொடுக்கிறார். அந்த அதிர்ச்சியின் முடிவில் ஒரு நீதி இருக்கிறது
நெக்ஸ்ட் ஒரு காதல் கதை. 2025-ல் வாழும் இளைஞன், 2050-ல் வாழும் பெண்ணை காதலிக்கிறான். இவர்களின் உறவில் ஒரு ரிஸ்க் இருக்கிறது அது என்ன? (மத்திமக்குறிப்பு: வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நாவலை நீங்கள் வாசித்திருந்தால் இந்தக் கதை உங்களை பெரிதாக அதிர்ச்சிக்குள்ளாக்காது)
படத்தின் பெரும்பலம் நடிகர்கள் தான். பிரியா பவானிசங்கர், எம்.எஸ் பாஸ்கர், அஸ்வின், தம்பி ராமையா, பரிகிடா சகா, சஞ்சனா திவாரி, பவானி ஸ்ரீ, ரச்ஷன், ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட அனைவரும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர்
சதிஷ் ரகுநாதனின் பின்னணி இசை நல்ல மைலேஜைக் கொடுத்துள்ளது. ஜெகதீஸ் ரவியின் ஒளிப்பதிவு படத்திற்கு நல்ல பலத்தைக் கொடுத்துள்ளது
மூன்று கதைகளின் முடிவில் ஆடியன்ஸுக்கு ஒரு மெசேச் பாஸ் செய்ததில் பாஸாகியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். இன்னும் விளாசியிருக்கலாம். போர் சிக்ஸை விட சிங்கிள்ஸே சேப் என நினைத்து விட்டார் போல.
டூமச் ஆப் திருத்தங்கள் தேவை என்றாலும் ஓரளவு அழுத்தம் தரவே செய்கிறது ஹாட்ஸ்பாட் 2மச்
3/5

