சல்லியர்கள்- விமர்சனம்

துயர்மிகு வலியை கமர்சியல் கலந்து பதிவு செய்துள்ளது சல்லியர்கள்

ஈழப்போராளிகளில் நாம் அறியாத மருத்துவக்குழுவைப் பற்றி விரிவாக பேசியுள்ளது படம். போரின் போது காயம்படும் வீரர்களை பதுங்கு குழிகளில் வைத்து வைத்தியம் பார்க்கும் மருத்துவர்களை சல்லியர்கள் என்பார்கள். அந்தச் சல்லியர்கள் இருக்கும் குழிகளை வான்வழி குண்டுகள் மூலம் அழிக்க முயற்சிக்கிறது இலங்கை அரசு. அதை நம் ஈழப்போராளிகள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது படத்தின் கதையாக இருக்கிறது. மேலும் படத்திற்குள் ஒரு காதலும், ஒரு குடும்ப எமோஷ்னலும் உள்ளது

இந்தப்படத்தைப் பொறுத்தவரை திரையில் தோன்றும் அனைவருமே கதையின் நாயகர்கள் நாயகிகள் தான். சத்யதேவி, கருணாஸ், திருமுருகன், ஜானகி, மகேந்திரன், நாகராஜ், பிரியா, ஆனந்த் செளந்தராஜன், மோஹன், சந்தோஷ் என அனைவருமே நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார்கள்

சிபி சதாசிவம் தனது ஒளிப்பதிவால் படத்தின் காட்சிகளை நமக்கு நெருக்கமாக உணர வைத்துள்ளார். கென்/ மற்றும் ஈஸ்வர் இருவரும் காட்சிகளில் தரும் எமோஷ்னலை தங்களது இசைவழியாக சரியாக கடத்தியுள்ளார்கள். கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் அவ்வளவு வலிகள். பாடல்களுக்கான மெட்டும் சாலச்சிறப்பு. “உன்னோடு கொண்ட காதல் மனதின் வரை மண்ணோடு கொண்ட காதல் உயிரின் வரை” போன்ற பாடல் வரிகள் படம் பேசும் அரசியலை துல்லியமாக உணர்த்துகிறது

ஈழப்போர் சம்பந்தமாக நாம் அறிந்திராத அரிய சம்பவங்களை கோர்த்து நல்ல கமர்சியல் அம்சம் சேர்த்து படமாக்கியுள்ளார் இயக்குநர் கிட்டு. சின்ன படம் என்ற தோற்றமின்றி படத்தின் ஸ்டேட்ஜிங் அமைந்துள்ளது. இதுவொரு பாசிட்டிவ் அம்சம். எதிரிக்கும் இரங்கும் ஈழ மருத்துவர்களின் ஈரத்தையும் வீரத்தையும் பதிவு செய்ததோடு, யுத்தம் தொடர்வதாய் படத்தை முடித்த விதம் அருமை மற்றும் பெருமை. படம் ஓடிடி ப்ளஸ்-ல் வெளியாகியுள்ளது. அவசியம் பாருங்கள்
3.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *