விளிம்பு நிலை மக்களின் உயிரை அதிகாரம் தங்கள் காயத்திற்கான களிம்பாக பயன்படுத்தியதை காத்திரமாகச் சொல்கிறது தண்டகாரண்யம்
கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் தினேஷும் கலையரசனும். இருவரும் அண்ணன் தம்பிகள். தன் தம்பி கலையரசனுக்கு வனக்காவலர் பணியைப் பெற்றுத்தர வேண்டும் என தினேஷ் முயற்சிக்கிறார். கலையரசனும் அதற்கான முயற்சிகளை எடுக்கிறார். வனக்காவலர் பணி ஒன்றே தன் காதலுக்கும் நல் வாழ்வுக்கும் வழி கொடுக்கும் என நம்பி கடும் உழைப்பைச் செலுத்துகிறார் கலையரசன். வனக்காவலர் பணிக்கு தேர்வு செய்யப்படும் கலையரசன் உள்ளிட்ட பலரை சரணடைந்த நக்ஸ்லைட்டுகள் என்ற பெயரில் பதிவு செய்து பயிற்சிக்கு அனுப்புகிறது மத்தியரசு. அந்தப் பயிற்சி முடிந்து கலையரசன் வேலைக்குச் சென்றாரா… பழங்குடி மக்களுக்கு ஆதரவாக வாழிடத்தில் களமாடும் தினேஷின் நகர்வுகள் அதிகாரம் முன் எடுபட்டதா? ஆகிய கேள்விகளுக்கு மீதிப்படம் பதில் சொல்கிறது
தினேஷ் கலையரசன் இருவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கியிருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை. தங்களுக்கு வழங்கப்பட்ட கேரக்டரின் வீரியம் உணர்ந்து தினேஷும் கலையரசனும் அதியற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர். நாயகிகள் இருவருக்கும் இதே வார்த்தைகள் பொருந்தும். ரித்விகா வின்சு சாம் இருவருமே தேர்ந்த நடிப்பு. டான்ஸிங் ரோஸ் அபாரமான நடிப்பைத் தந்துள்ளார். பாலசரவணன் அருள்தாஸ் ஆகியோர் பெரியளவில் ஸ்கோர் செய்கின்றனர்
ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா காடுகளின் அடர்த்தியைக் காட்டும் போதும், வனக்காவலர்களின் பயிற்சி முகாமைக் காட்டும்போதும் டபுள் உழைப்பைக் கொடுத்துள்ளார். தரமான விஷுவல்ஸ்!
ஜஸ்டின் பிரபாகரன் நம் மனதுக்குள் பின்னணி இசையை படரவிட்டுள்ளார். பாடல்களும் அசத்தல். இளையராஜாவின் “ஓ பிரியா பிரியா” பாடல் வருமிடம் ஹைக்கூ கவிதை
தங்கள் அரசியல் லாபங்களுக்காக அரசாங்கம் எளிய மனிதர்களைப் பிடித்து அவர்களை நக்சல்கள் என பலி சுமத்திய கொடும் வரலாற்றை நேர்மையோடு படமாக்கியுள்ளார் அதியன் ஆதிரை. யாரை அடித்தால் கேள்விகள் எழாதோ.. கேள்விகள் எழுப்பினாலும் அடக்கிடலாம் என்ற சூழலில் வாழ்பவர்களை பிடித்து வதம் செய்கிறது அரசு. 2009 காலகட்டத்தில் இப்படியான மனித உயிர் மோசடி நடந்தது என்பதை படம் பேசியுள்ளது. இரு நாயகர்களுக்கான நோக்கம் தெளிவாக இருந்தும் அவர்களுக்கான பயணத்தை முதல் பாதியில் இன்னுமே தெளிவாகச் சொல்லியிருக்கலாம். இரண்டாம் பாதியில் துளிகூட சோர்வில்லை. பேச வந்த அரசியலையும் கமர்சியல் அம்சத்தையும் சரிவரச் சொல்லிவிட்டார் இயக்குநர். நிச்சயமாக புதிய களம் புதிய அனுபவம் இந்த தண்டகாரண்யம்
3.75/5
-வெண்பா தமிழ்

