மாரீசன்- விமர்சனம்

சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலைச் செய்யும் பாதகர்களை களையெடுப்பவரே இந்த மாரீசன்

ஃபகத் ஃபாசில் போகிற போக்கில் கொள்ளையடித்து வாழ்பவர். ஒருநாள் அவர் வடிவேலு வீட்டிற்குள்ளும் செல்கிறார். வடிவேலு திருட வந்த ஃபகத் ஃபாசிலிடம் ஒரு உதவி கேட்கிறார். அந்த உதவிக்குப் பலனாக வடிவேலு பணம் தருவதாகச் சொல்கிறார். பணத்திற்காக ஃபகத் வடிவேலுவிற்கு உதவி செய்கிறார். அந்த உதவி ஒரு பயணமாக விரிகிறது. பயணத்தின் முடிவு என்ன என்பதே படத்தின் கதை

கதாநாயனாக ஃபகத்ஃபாசில் நம்மை வழக்கம் போல வசீகரிக்கிறார். அவரின் எதார்த்தம் நிறைந்த நடிப்பே படத்தை பாதி காப்பாற்றிவிடுகிறது. கதையின் நாயகனாக வடிவேலு. மாமன்னன் படத்திற்குப் பின் இதில் சற்று சீர்யஸ் முகம் காட்டி நடித்துள்ளார். ஓவர் எமோஷ்னல் காட்சிகளில் ஏனோ நாம் வடிவேலுவுடன் ஒன்ற முடியவில்லை. விவேக் பிரசன்னா கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார்
சித்தாரா சற்று நேரமே வந்தாலும் நிறைவு

படத்தில் பெரும் மாயம் செய்திருப்பது யுவன் சங்கர்ராஜாவின் பேக்ரவுண்ட் மியூசிக் தான். எந்த இடத்தில் இசைக்க வேண்டாம் என்ற எளிய வித்தை மூலம் சில காட்சிகளை மெளனமாகவே நமக்குள் கடத்துகிறார். மாரீசன் காட்சிகளில் கம்பீரம் காட்டி நிற்கிறார். ஒரு தேர்ந்த ஒளிப்பதிவைச் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் கலைசெல்வன் சிவாஜி

எளிய மனிதனின் ஈரமும் வீரமும் படத்தில் பேசப்பட்டுள்ளது. எதைக் காட்சியாக்க வேண்டும். எதை வசனங்களாக சொல்ல வேண்டும் என்ற வித்தையைக் கற்றுள்ளார் இயக்குநர் சதிஸ் சங்கர். கதை திரைக்கதை வசனத்தில் ஆவ்ரேஜ் ஸ்கோர் வாங்குகிறார் கிருஷ்ண மூர்த்தி. வடிவேலு ஃபகத் இருவருக்குமிடையே மலரும் உள்ளார்ந்த அன்பை இன்னும் வீரியமாக காட்டியிருக்கலாம். இரண்டு ட்விஸ்ட்களை மட்டுமே நம்பி மொத்த திரைக்கதையையும் அமைத்தது பலவீனமே! படத்தின் நீளத்தையும் சற்று குறைத்திருக்கலாம்

குற்றத்திற்கான தண்டனை கிடைத்தே ஆகவேண்டும் அது எவ்வழியாகவேணும். என்பதை ஆணித்தரமாகச் சொல்லும் படம் சட்டரீதியான நம்பிக்கையை கொஞ்சம் கொடுத்திருக்கலாம். சிற்சில குறைபாடுகள் இருந்தாலும் மாரீசன் தவிர்க்க முடியாமல் நம் நெஞ்சை துளை போடத்தான் செய்கிறது
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *