“ஒவ்வொரு நாட்டிற்கும் சட்டவிதிகள் வேறுபடும். ஆனால் நீதி என்பது மாறுபாடு இல்லாதது” என்ற கருத்தை அடியொற்றி நாளை ZEE5-ல் (18.07.2025) வெளியாகிறது சட்டமும் நீதியும் வெப்சீரிஸ்
நீதிமன்றத்திற்கு வெளியே தனக்கும் தன் தொழிலுக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போல நோட்டரி வக்கீலாக அமர்ந்துள்ளார் சரவணன். அவர் மிகுந்த திறமையாளர் என்ற போதும் அவருக்கு வாதாடுவதில் விருப்பமில்லை. அதற்கு ஒரு பின்கதை இருக்கிறது. இச்சூழலில் நீதிமன்ற வளாகத்தில் ஷண்முகம் என்பவர் தன் மகளை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையோடு தீக்குளிக்கிறார். நாயகி நம்ரிதா வற்புறுத்த, பொதுநல வழக்காக இந்த வழக்கைச் சரவணன் கையிலெடுக்கிறார். காவல்துறையும் அதிகார வர்க்கமும் இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்கான வேலைகளைச் செய்கிறது. தடைகளைத் தகர்த்து சரவணன் நீதியைப் பெற்றாரா என்பது சீரிஸின் சீரியசான க்ளைமாக்ஸ்
இறுக்கமும் தளர்வும் சமமாக கலந்த நோட்டரி வக்கீலாக வரும் சரவணன் அசத்தியுள்ளார். சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதை விட நீதியை பூஜிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட அவரது கேரக்டர் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. அவரது உதவியாளராக வரும் நம்ரிதா மிக இயல்பாக நடித்து மனதில் அமர்கிறார். க்ளைமாக்ஸில் கோர்ட்டில் அவர் செய்யும் ஒரு துடுக்குச் செயல் கைத்தட்ட வைக்கிறது. அரோல் டி.சங்கர், தீக்குளிக்கும் அப்பாவி அப்பாவான ஷண்முகம் உள்ளிட்ட சீரிஸில் தோன்றும் எல்லா நட்சத்திரங்களும் மின்னுகிறார்கள்
பின்னணி இசை படத்தில் ஒரு கேரக்டராக நம் கூடவே பயணிக்கிறது. குறிப்பாக 3-ஆவது எபிசோடில் சரவணனுக்கு கொடுத்துள்ள ஒரு பிஜி.எம் வாவ் ரகம். ஒளிப்பதிவாளர் தனது பணியை நிறைவோடு செய்துள்ளார். சிக்கனமான ப்ரேமிங்கில் கூட சிறப்புச் செய்துள்ளார். எடிட்டர் இன்னுமே ஷார்ப்பாகச் செயல்பட்டிருக்கலாம்
ZEE5 தயாரித்துள்ள இந்த சீரிஸில் பேசப்பட்டுள்ள நீதி தேவையானது என்றாலும், வணிக நோக்கத்திற்காக நீட்டிக்கப்பட்ட இரண்டு எபிசோடுகளை குறைத்திருக்கலாம். இயக்குநர் பாலாஜி செல்வராஜ் ரைட்டிங்கில் மிகத்திறமையாகச் செயல்பட்டிருக்கிறார். ஸ்டேஜிங்கில் கூடுதல் கவனத்தோடு செயல்பட்டிருக்கலாம். முக்கியமாக இறுதி எபிசோடில் காட்டப்பட்ட விசயத்தையே சரவணன் திரும்பவும் வசனமாகச் சொல்கிறார். ‘கூறியது கூறல்” எப்போதுமே அயர்ச்சி தரக்கூடியதல்லவா?
பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக இப்படியான நீதி நிறைந்த குரல்கள் நீதிமன்றத்தில் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்.இது இக்காலத்தின் கட்டாயம் என்பதால் குறைகளை மன்னித்து இந்த வெப்சீரிஸை ஸ்ட்ரீமிங் செய்யலாம்
3/5
-வெண்பா தமிழ்

