ஜான்டோ படம் குறித்து அர்ஜுன் தாஸ் பகிர்ந்த தகவல்

நடிகர் அர்ஜுன் தாஸ் முதல்முறையாக போலீஸ் வேடம் போட்டுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அதனால் ஜான்டோ படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. நேற்று படத்தின் பிரஸ்மீட்டில் படக்குழு அனைவரும் படம் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தினார்கள். விழாவில்
நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது,

“முதலில் இந்தப் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் கதையை முதலில் இயக்குநர் மதுமிதா என்னிடம் சொன்னபோது, கதையைப் படித்துப் பாருங்கள் என்றுதான் கூறினார். கதையைப் படித்துவிட்டு நடிக்கச் சம்மதம் தெரிவித்தேன். அதன்பிறகு இப்படத்தை ‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அர்கா நிறுவனத்துடன் பணியாற்றுவது எனக்குப் பெருமையான விஷயம். எங்கள் படத்தின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தில் நடித்த நீரவ் மிகவும் அழகாகவும், இயல்பாகவும் நடித்திருக்கிறார். அவருக்கு இன்னும் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். ஜாராவுக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஸ்ருஷ்டி இந்தப் படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். குறிப்பாக, அவருக்குத் தமிழ் பேசத் தெரியாவிட்டாலும் சிங்க் சவுண்ட் முறையில் படப்பிடிப்பு நடைபெற்றபோது கிடைக்கும் நேரங்களில் வசனங்களைத் தொடர்ந்து பயிற்சி செய்து, ஒரே டேக்கில் சிறப்பாகப் பேசி முடிப்பார். சஞ்சனா இந்தப் படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். பிரீதா மேடம் எங்களுடைய ஒளிப்பதிவாளர். எந்த இடத்திற்குச் சென்றாலும் மிகவும் இயல்பாகப் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார். தயாரிப்பு வடிவமைப்பாளர் அஷ்வினி மேடமும் அவரது குழுவினரும் படப்பிடிப்புத் தளத்தில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு ஃபிரேமையும் சிறப்பாகக் கொண்டுவருவதில் அதிக கவனம் செலுத்தினார்கள். காஸ்ட்யூம் டிசைனர்களான பிரியா ஹரி மற்றும் பிரியா கரண் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே தங்களுக்குள் புரிந்துகொண்டு பணியாற்றுவார்கள். அவர்களுடைய ஒருங்கிணைப்பு மிகவும் ஆச்சரியமானது. அதேபோல் அனு மேடம், அதுல் கிருஷ்ணா, ராஜேஷ், உதவி இயக்குநர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. படத்தொகுப்பாளர் விஜய் வெங்கடரமணன் அதிகம் பேசமாட்டார். ஆனால், அவருடைய பணி படத்தை மிகச்சிறப்பாக வடிவமைத்திருக்கிறது.

அர்ச்சனா மேடம் இந்தப் படத்தில் என்னுடைய அம்மாவாக நடித்திருக்கிறார். அவருடன் எனக்கு ஒரு சிறப்பான நினைவு இருக்கிறது. ‘கைதி’ படத்திற்காக எனக்குக் கிடைத்த முதல் விருது ஜீ விருது தான். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது அர்ச்சனா மேடம். அதன்பிறகு அவர் தொகுத்து வழங்கும் விருது விழாக்களில் எனக்கு விருது கிடைப்பது வழக்கமாகிவிட்டது. அதனால் அவரை என்னுடைய அதிர்ஷ்ட தேவதை என்று அழைப்பேன். இந்தப் படத்திலும் மிகவும் அழகாக நடித்திருக்கிறார். இயக்குநர் மதுமிதாவுடன் இது எனக்கு இரண்டாவது படம். ஆரம்பத்தில் அவரை மேடம் என்று அழைத்தாலும், எங்களுடைய நீண்ட பயணத்திற்குப் பிறகு இப்போது மதுமிதா என்று நட்புடன் அழைக்கிறேன். இதற்கு முன்பு ஒரு படத்திற்காக என்னை ஆடிஷனுக்கு அழைத்திருந்தார். அப்போது ஆடிஷன் செய்து அனுப்பினேன். அவர் அதைத் தேர்வு செய்ததாகத் தகவல் வந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது ‘ஜான் டோ’ படத்திற்காக மீண்டும் என்னைத் தொடர்புகொண்டு இந்தக் கதாபாத்திரத்திற்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்று கூறினார். அவருடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவம். மதுமிதா மிகவும் அர்ப்பணிப்புடன், முழுமையாகத் திரைப்படத்தைப்  பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும் இயக்குநர். ஒரு பெண் இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு ஒட்டுமொத்த படையையே வழிநடத்தும் ஒருவராகப் பணியாற்றியிருக்கிறார். அவருக்குத் துணையாகத் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு இசையமைத்த முஜீப் மஜீத் மற்றும் பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, என்னுடைய சகோதரி மாளவிகாவும் இந்தப் படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். குடும்பத்தினருக்காகப் பாடல் பாடுவதற்கு அவருடைய குரலைப் பரிசோதித்துப் பார்க்கும்படி மதுமிதாவிடம் கேட்டேன். அவர் ஆடிஷனில் தேர்வானது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படத்தை வழங்கும் ஏஜிஎஸ் (AGS) நிறுவனம், அர்ச்சனா மேடம், ஐஸ்வர்யா மேடம் மற்றும் அவர்களுடைய குழுவினருக்கும் நன்றி. நெட்ஃபிளிக்ஸ், ஜீ தமிழ், டிவோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஜான் டோ’ ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் மட்டுமல்ல; இதில் வலுவான உணர்வுபூர்வமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் திரில்லராகவும் இருக்கும். நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் (Nicholas Chevaillier) இணைந்து படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர். படத்திற்கு பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைக்க, ஆர்டிஸ்ட் 404 (Artist 404) கூடுதல் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. படத்தொகுப்பை விஜய் வெங்கடரமணன் கவனித்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளராக அஷ்வினி காலே பணியாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *