துபாயை அதிரவைத்த சூர்யா! சீன் பட நிகழ்வின் சிறப்பான தருணம்!

ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘சீன்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் முதல் பிரத்யேக நிகழ்வு துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘சீன்’ படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியிருக்க, வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷ்யாம் இசையமைந்திருக்கிறார். ஜெயஸ்ரீ தாமோதரன் இணை தயாரிப்பாளராக பணியாற்றி, மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘சீன்’ படத்தை ரசிகர்களுக்கு சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கி இருக்கும் படக்குழு. இதன் முதல் நிகழ்வு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் பிரத்யேகமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா, நஸ்லென், நடிகை நஸ்ரியா நஜீம், இயக்குநர் ஜித்து மாதவன், இணை தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ தாமோதரன்- ராஜசேகர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

*இணை தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ தாமோதரன் பேசுகையில்,*

” ழகரம் என்பது சூர்யா அண்ணாவின் கனவு. அவருடைய கனவை நனவாக்கும் முயற்சிதான் ழகரம் ஸ்டுடியோஸ். சீன் படத்தின் மூலமாக முதல் முயற்சியை தொடங்கியிருக்கிறோம். ‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’ போன்ற திரைப்படங்களை தயாரித்த 2d என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை கடந்து, ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்திலும் படங்களை தயாரிக்க விரும்புகிறோம்.

இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஜித்து மாதவன் புதிய உலகத்தை உருவாக்கி இருக்கிறார். அதில் நாங்களும் அவருடன் பயணித்திருக்கிறோம். படத்தின் வெளியீட்டிற்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி.

*2 டி என்டர்டெய்ன்மென்ட் ராஜசேகர் பேசுகையில்,*

”ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அழகான தொடக்கம் இந்த திரைப்படம். படத்தைப் பற்றி இந்த தருணத்தில் நிறைய விசயங்களை பகிர்ந்து கொள்ள முடியாது. இந்தத் திரைப்படத்தை திரையரங்கத்தில் பார்க்கும்போது நல்லதொரு அனுபவத்தை அனைவருக்கும் அளிக்கும். காமெடியாகவும் இருக்கும். இந்த திரைப்படத்தில் வித்தியாசமான சூர்யாவை ரசிகர்கள் பார்ப்பார்கள். இந்த திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் நன்றி” என்றார்.

*இயக்குநர் ஜித்து மாதவன் பேசுகையில்,*

”நான் மலையாளத்தில் பேச தொடங்கலாம் என நினைக்கிறேன். இந்த அரபு தேசத்தில் மலையாளிகள் அதிகம் இருக்கிறார்கள். ஆனாலும் தமிழில் பேசித்தான் ஆக வேண்டும். ஏனெனில் தமிழில் படத்தை இயக்கியிருக்கிறேன். அனைவரும் முதல் நாளில் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறோம்.

சூர்யா இந்தப் படத்தின் கதையை கேட்கத் தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு சிரிக்கத் தொடங்கி விட்டார். அப்போதே இந்த கதை அவருக்கு பிடித்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டேன்.

தற்போது திரைப்படங்களுக்கான எல்லைக்கோடு மறைந்து விட்டது. எல்லோரும் எல்லா மொழி திரைப்படங்களையும் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். கேரளாவில் தமிழ் திரைப்படங்களையும்… தமிழகத்தில் மலையாள திரைப்படங்களையும்… பார்த்து வெற்றி பெறச் செய்கிறார்கள். தற்போது தமிழ் திரைப்படம்- மலையாள திரைப்படம் என்று வேறுபாடு ரசிகர்களிடத்தில் இல்லை. அதனால் இந்த திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

*நடிகர் நஸ்லென் பேசுகையில்,*

”மிகுந்த பயத்துடன் தான் நான் இங்கு நிற்கிறேன். நான் இதற்கு முன் பலமுறை துபாய்க்கு வருகை தந்திருக்கிறேன். ஆனால் இந்த முறை சற்று ஸ்பெஷல்.‌ காரணம் இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். அதை நான் ஸ்பெஷலாக உணர்கிறேன். இதற்காக சூர்யா – நஸ்ரியா-  ஜித்து – ஆகியோருக்கு நன்றி. நவம்பர் ஆறாம் தேதி திரையரங்கத்தில் இந்த படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய அபிப்பிராயத்தை தெரிவிக்க வேண்டும். உங்களுடைய அன்பும் ஆதரவும் தொடரட்டும்.

நான் சிறிய வயதிலிருந்து திரையில் பார்த்து ரசித்த ஒரு நட்சத்திர நடிகருடன் நடிக்க வேண்டும் என்ற போது.. முதல் நாள் படப்பிடிப்பின் போது நெஞ்சம் படபடத்தது. மனதில் எதுவுமில்லை. மனம் முழுவதும் வெற்றிடமாகவே இருந்தது. ஆச்சரியத்தில் மிதந்தேன். ஒரு கனவு நனமானது போல் இருந்தது. இந்தப் படத்தில் நான் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்” என்றார்.

*நடிகை நஸ்ரியா நஜீம் பேசுகையில்,*

” நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் துபாயில் தான். அதனால் மீண்டும் இங்கு வருகை தந்திருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.‌ 12 வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டும் தமிழில் நடித்திருக்கிறேன். இதற்காக என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தின் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் ஜித்துவிற்கு நன்றி.‌ இந்த திரைப்படத்திற்கான பயணத்தில் உடன் பயணித்த சூர்யா- நஸ்லென்- ஆகியோருக்கும் நன்றி. நவம்பர் 6ஆம் தேதி அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று இந்த படத்தை பார்க்க வேண்டும். அனைவரும் வயிறு குலுங்க சிரித்து மகிழ்வீர்கள்.

நான் சிறிய வயதில் இருந்து சூர்யாவின் திரைப்படங்களை பார்த்து ரசித்து இருந்தாலும், இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்தது மறக்க முடியாதது” என்றார்.

*நடிகர் சூர்யா பேசுகையில்,*

”இங்கு வருகை தந்து எங்களுக்காக பொறுமையுடன் காத்திருந்து அன்பையும், ஆதரவையும் அளித்த அனைவருக்கும் நன்றி.

நான் இயக்குநர் ஜித்து மாதவனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என மனதிற்குள் பிரார்த்தனை செய்தேன். அது உடனே நடைபெறும் என நினைக்கவில்லை.  இதற்கு பின் ஒரு நாள் அவர் என்னை சந்தித்தார். கதையை சொன்னார். பொதுவாக நான் கதை கேட்கும் போது அமைதியாகத்தான் கேட்பேன். ஆனால் ஜித்து கதையை கேட்ட ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு சிரித்தேன். அவர் சொன்ன கதையை முழுவதுமாக கேட்டு ரசித்தேன். அவர் எப்போதும் போல் ‘சீன்’ திரைப்படத்திலும் புதிய உலகத்தை உருவாக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் ‘மாயா’ என்ற கதாபாத்திரத்தில் திறமையான நடிகை நஸ்ரியா தன் முழுமையான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.‌

இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நஸ்லென் இன்னும் நிறைய தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும். நடிப்பார்.‌ இந்தப் படத்தில் நடிப்பில் அவர் ஒரு மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறார்.

நான் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமின் ரசிகர். அவரும் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
ஒளிப்பதிவாளர் -படத்தொகுப்பாளர் – சண்டை பயிற்சியாளர்- என அனைவரும் இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் இனிமேல் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்விலும் கலந்து கொண்டு அவர்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள். கேரளாவில் இருந்து ஒரு குழுவினர் தமிழில் ஒரு திரைப்படத்தை வித்தியாசமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

திரையுலகில் அறிமுகமாகி 28 ஆண்டுகளில், 48 திரைப்படங்களை நிறைவு செய்திருக்கிறேன். ஆனால் இந்த ‘சீன்’ திரைப்பட பயணம் மிகவும் புத்துணர்ச்சியானது. தீபாவளியன்று…. உங்களுக்கு எல்லாம் எப்படி ‘கருப்பு’ திரைப்படம் பிடித்ததோ.. ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் பிடித்ததோ… அதேபோல் ‘சீன்’ திரைப்படமும் பிடிக்கும். இந்த திரைப்படம் ஃபிரஷ்ஷான படைப்பாக இருக்கும். இதை நீங்கள் கிரைம் திரில்லர் என்றும் சொல்லலாம். மர்டர் மிஸ்டரி என்றும் சொல்லலாம். ஆனால் இந்த திரைப்படம் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் இருக்கும்.

நான் இதுவரை மலையாளத்தில் நேரடியாக நடிக்கவில்லை. இருப்பினும் அங்கிருந்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து ஒரு தமிழ் படத்தில் நடித்திருக்கிறேன். அதனால் இந்த படம் கேரள மக்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். எனவே தீபாவளி திருநாளை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த படத்தின் கதையை கேட்டவுடன் நடிக்க தீர்மானித்தேன். படத்தை உருவாக்கவும் முடிவு செய்தோம்.

சரவணனிடமிருந்து சூர்யாவை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்காக நான் சூர்யாவாக இருக்கிறேன். சூர்யாவின் கண்டறியப்படாத பல முகங்களை திரையில் அவர்களுக்காக வெளிப்படுத்துகிறேன். அவர்களுடைய நிபந்தனையற்ற அன்பின் காரணமாக வித்தியாசமான சூர்யாவை திரையில் வெளிப்படுத்துகிறேன். ரசிகர்களுக்கும்…கதாபாத்திரத்திற்கும்… எந்த அளவிற்கு உண்மையாக இருக்க முடியுமோ..! அந்த அளவிற்கு கடுமையாக உழைக்கிறேன். இதற்காக தங்களுடைய பங்களிப்பை வழங்கிய இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தான் இந்த சூர்யாவிற்கான அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

சொந்த வாழ்க்கையிலும்.. தொழில் முறையிலான வாழ்க்கையிலும் நான் ஒரு விசயத்தில் சிறிய அளவில் முயற்சி செய்தால்…. அதிலிருந்து எனக்கு பத்து மடங்கு அதிகமாக நல்லவை கிடைக்கிறது.  நடிகராக நான் ஒரு சதவீதம் முயற்சி செய்தால்… எனக்கு ரசிகர்களிடமிருந்து நூறு சதவீதம் பேரன்பு கிடைக்கிறது.

இங்கு பல மணி நேரம் பொறுமையுடன் நின்று கொண்டு பார்த்து ரசிக்கிறார்கள். இந்த ரசிகர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர்கள் என் மீது வைத்திருக்கும் மரியாதையையும், என் மீது செலுத்தும் பேரன்பும் தான் என்னை தொடர்ந்து இயங்க வைக்கிறது.

நானும், ராஜசேகரும் பள்ளிக்கூடத்தில் இருந்து நண்பர்கள். நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து  2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை தொடங்கினோம்.  இந்த நிறுவனத்தின் சகோதர நிறுவனம் தான் ழகரம் ஸ்டுடியோஸ்.

அகரம் பவுண்டேஷனை இருபது ஆண்டுகளாக ஜெயஸ்ரீ தாமோதரன் தான் நிர்வகித்து வருகிறார். தற்போது ழகரம் ஸ்டுடியோவையும் அவர் நிர்வகிக்க தொடங்கி இருக்கிறார்.  ழகரத்திற்கு இது முதல் மேடை. இதற்கு உங்களின் அன்பும் ஆதரவும் தேவை.

2 டி நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து மக்களை மகிழ்விக்கும் தரமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள படங்களை தயாரிக்கும். அந்த திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெற வேண்டும் .ரசிகர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்றிருக்கும். இவை பெரும்பாலும் ரசிகர்களுக்கு பழக்கமான முறையில் இருக்கும். இது தொடரும்.

ஆனால் ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் புதிய இளம் திறமைசாலிகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக தொடங்கி இருக்கிறோம்.‌ தொடர்ந்து இந்த நிறுவனத்தின் மூலம் புதிய இளம் திறமைசாலிகளை கண்டறிந்து அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.

‘யுவர் த பெஸ்ட்..யூ கேன் யூ எனிதிங்..’ இந்த டயலாக் படம் பார்க்கும்போதும்… பார்த்த பிறகும்… ரசிகர்கள் அனைவருடனும் தொடர்பு கொள்ளும் என நம்புகிறேன்.

நீங்கள் இன்ஸ்டாகிராமில் நல்ல விசயங்களையோ அல்லது கெட்ட விசயங்களையோ பார்த்தால்.. பார்க்கத் தொடங்கினாளல்.. தொடர்ந்து அதே போன்ற வீடியோக்கள் உங்களுடைய இன்ஸ்ட்டாவில் வரும். அதனால் தான் உங்களுடைய சிந்தனையை நல்ல விசயங்களுக்கு மட்டுமே செலவிடுங்கள். நல்ல விசயத்தை மட்டுமே இன்ஸ்டாவில் பாருங்கள். இதுதான் உங்களுடைய வாழ்க்கையிலும் எதிரொலிக்கும். இதனால் எப்போதும் நல்ல எண்ணங்களை மட்டுமே நினைக்க வேண்டும். அப்போதுதான் அது வாழ்க்கையிலும் எதிரொளலித்து.. மகிழ்ச்சியையும், அமைதியையும் தரும். இது மிகவும் உண்மையானது. சத்தியமானது. எல்லோரும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என நான் மனதிற்குள் பிரார்த்தித்துக் கொள்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *