குழந்தைகளின் மனதின் குரலை திரையில் விஷுவலாக்கித் தந்துள்ளார் இயக்குநர் ராம். இந்தப் படம் தான் ராமின் நிஜமான பேரன்பு
நெருக்கடிக்குள் வலிந்து திணித்துக் கொண்டு மிடில் க்ளாஸ் வாழ்வு வாழும் மிர்ச்சி சிவா & கிரேஸ் ஆண்டனி இருவரும், தன் மகன் மிதுல் ரயனை எம்.எல்.ஏ மகன் படிக்கும் ஸ்கூலில் படிக்க வைப்பதற்காக மனைவி கோயமுத்தூரிலும் கணவன் சென்னை ஓரத்திலும் உழைத்து உழைத்து தேய்கிறார்கள். மகன் தந்தை சிவாவோடு இருக்கிறான். அம்மாவின் அன்பை போனிலும், அப்பாவின் அன்பை போகிற போக்கிலும் பெரும் அவனுக்கு எங்காவது பறந்து போகவேண்டும் போல் தோன்றுகிறது. இயல்பாக அவனது ப்ளானின் படி ஒரு பைக் ரைட் செல்கிறார்கள் அவனும் சிவாவும். அந்தப் பயணத்தின் இறுதியில் பெற்றோர்களுக்கு ஒரு உறுதியான பாடத்தை மிதுல் ரயன் வழங்க படம் நிறைவைத் தந்து நிறைவடைகிறது
“படுக்க தேவை பாய்..அவ சொல்லிட்டா ஹாய்” என்ற ரேஞ்சில் வசனம் பேசி கடுப்படிக்கும் மிர்ச்சி சிவாவா இது? வாவ்!! மனிதர் வழக்கமான மாடுலேசனில் பேசினாலும் இப்படத்தின் கதையோட்டத்திற்கு அது பக்காவாகப் பொருந்துகிறது. தன் அப்பா பாலாஜி சக்திவேலோடு அவர் பேசும் அந்த ஒரு காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறது. படத்தின் அடுத்த ஹீரோ சாட்சாத் அந்தச் சிறுவன் மிதுல் ரயன் தான். இந்த வருட மழலை விருதுகள் சிலவற்றை அவனுக்காக எடுத்து வைத்துக்கொள்ளலாம். அஞ்சலி வரும் கொஞ்ச நேரத்தை, மனதை கொஞ்சும் நேரம் எனலாம்! So cute. சிவாவின் மனைவியாக வரும் கிரேஸ் ஆண்டனி, அவரின் கடையில் வேலை செய்யும் இளைஞி இருவரும் சிறப்பான தேர்வு. சிறப்பாக நடித்துள்ளனர். வழிப்பயணத்தில் வரும் சிலநிமிட கேரக்டர்கள் கூட முத்திரைப் பதிக்கிறார்கள்
ஏகாம்பரத்தின் கேமரா நாம் வாழும் நிலப்பரப்பு இவ்வளவு அழகானதா? என்று மனதை விலாசமாக்குகிறது. யுவனின் பின்னணி படத்தின் மிகப்பெரிய பலம். அதைப்போலவே பாடல்களுக்கான பின்னணி இசையை அள்ளித்தந்த சந்தோஷ் தயாநிதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரும் பின்னணி இசையை இசைத்துள்ளார். பேசும் வசனங்களை பாடல் வரிகளாக்கி வசீகரிக்கிறார் மதன் கார்க்கி
படத்தில் திரைக்கதைக்கான பார்மட்-ஐ நம்பாமல் கதை மாந்தர்களின் நிஜ உணர்வுகளை ரசிகர்களுடன் கலந்து கொள்ள வைத்து அசத்தியுள்ளார் ராம். கண்களையும், காதுகளையும் இதயத்தையும் நேர்மறை எண்ணத்தோடு வைத்திருந்தால், பார்ப்பதும், கேட்பதும், உணர்வதும் உன்னதமாகவே தெரியும் என்பதை படம் உணர்த்துகிறது
பறந்து போ கவலைகளை மறந்து போக வைப்பதோடு நம்மை கரைந்து போகவும் வைக்கிறது
அவசியம் தியேட்டரில் சென்று பாருங்கள்
4/5
-வெண்பா தமிழ்

