பேருழைப்பில் முகிழ்த்து வெளிவந்துள்ள ஆழிசூழ் கதை!
ராமநாதபுரம் கடற்கரையோரம் பாயமரப்படகு போட்டி பிரசித்தம். அதை அடிப்படையாக வைத்தே படத்தின் கதை நிகழ்கிறது. நாயகன் சூரி படகுப் போட்டியின் நாயகன்! அவர் அதைவிட்டு விலகி 20 ஆண்டுகளாக சென்னையில் வாழ்கிறார். ஊரில் அவருக்குப் பெரும் பகையும் ஒரு சாபமும் மிச்சமிருக்கிறது. மிச்சமுள்ளதை நேர்செய்ய ஊருக்குச் செல்லவேண்டிய சூழல் அவருக்கு வருகிறது. சூரி ஊருக்குச் செல்கிறார். அதன்பின் கதை பறக்கிறது. பழைய மண்டாடியான சூரி படம் பார்க்கும் நம்மை எப்படியெல்லாம் கொண்டாட வைத்தார் என்பது மீதிப்படம்!
சூரி முன்னணி நடிகர்கள் இடத்தில் இடம்பெற்றுள்ளார் என்பதைத் தாண்டி தற்போது முன்னணி நடிகர்களை முந்திச் செல்லும் இடத்திற்கு நகர்ந்துள்ளார். இந்தப்படத்தில் அவர் காட்டியிருக்கும் நடிப்பு அசாத்தியமானது. ஒரு முக்கிய கேரக்டரிடம் அவர் மன்னிப்பு கேட்கும் காட்சியை தமிழ்சினிமாவின் ஆழ்கடல் முத்து எனலாம். நாயகி மஹிமா நம்பியார் வியக்க வைக்கிறார். சிற்சில சீன்கள் என்றாலும் பின்னியெடுத்துள்ளார். சத்யராஜ் கேரக்டர் அருமையாக எழுதப்பட்டுள்ளது. படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ள சுஹாஸ் தனித்துத் தெரிகிறார். அவரின் ஒவ்வொரு அசைவும் அட சொல்ல வைக்கிறது. அவருக்கான குரலை வெற்றிமாறன் வழங்கியுள்ளார். அட்டகாசம். பாலசரவணன், மஹிமாவின் மகனாக வரும் மிதுன் தரமான நடிப்பைக் கொடுத்துள்ளனர்
படத்தின் ஆகப்பெரும் பலம் கேமராமேன் S.R.கதிர். கடலுக்குள் இப்படியான ஷாட்களை எப்படி எடுத்தார்? வியக்க வைக்கும் மேக்கிங்! ஜிவி பிரகாஷ் படத்திற்கு பெரும் ஜீவனாக இருக்கிறார். பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே ஆகத்தரம்
படத்தின் கதை, திரைக்கதை எவற்றிலும் துளியும் குழப்பமில்லை. நேர்கோட்டில் பயணிக்கும் கதையில் ஆழத்திற்கும் குறைவில்லை. எமோஷ்னல் ஏரியாவில் சின்னதாக பிசிறு தட்டினாலும் கூட, காட்சியமைப்பில் மிரள வைத்துள்ளார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி. அசாத்தியமான உழைப்பும், ஆழமான எழுத்தும் கை கோர்த்தால் நிச்சயமாக நல்ல சினிமா கிடைக்கும் என்பதற்கு இந்த மண்டாடி சாட்சி!
4/5
-வெண்பா தமிழ்

