“என்ற காதலி உன்ற மனைவியாகலாம். But உன்ற மனைவி என்ற காதலியாக முடியாது சாரே” என்ற பாக்கியராஜின் புகழ்பெற்ற வசனத்தை கொஞ்சம் உல்டா செய்து ஒரு கதை செய்திருக்கிறார் பரத் ஜே. அவர் தான் படத்தின் நாயகனும்!
நான்வெஜ் (பீப் உள்பட) சாப்பிடும் ஹீரோ பரத் ஜே, Full & full வெஜிடேரியன் சாப்பிடும் கல்ச்சர் கொண்ட ஹீரோயின் காயத்ரி ஷான். காதலுக்கு வெஜ் நான்வெஜ் கிடையாதில்லையா? ஆக இருவரும் காதலிக்கிறார்கள். நாயகி வீட்டில் நாயகனின் சாதியைச் சொல்லி கடும் எதிர்ப்பு நிகழ்கிறது. அதனால் இருவருக்கும் கல்யாணம் நடக்கவில்லை. நாயகியை வேறோர் மாப்பிள்ளைக்கு மணம் முடித்து கொடுக்கிறார்கள். ஆனால் நாயகி மீண்டும் நாயகனை நாடுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது? என்பது கதை
ஆழமான உணர்ச்சிகளை காட்ட வேண்டிய காட்சிகளில் கூட மேலோட்டமான ரியாக்சன்களாலே கடந்து செல்கிறார் ஹீரோ. இருந்தாலும் ஒரு சில இடங்களில் கவரவும் செய்கிறார். நாயகி காயத்ரி ஷான் கச்சிதமான தேர்வு. போன் மூலமாக ஒரு காட்சியில் கலங்கடித்துள்ளார். கேரக்டரை முழுமையாக உள்வாங்கியுள்ளது அவரின் நடிப்பில் தெரிகிறது. நந்தன், ரவி எழுமலை, ஸ்ரீதர், சிவாங்கி உள்பட பிற நடிகர்கள் ஓரளவு மிகையின்றி நடித்துள்ளனர்
சிக்கனமான பட்ஜெட்டில் முடிந்தளவு நல்ல ஒளிப்பதிவை கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர். இசைஞர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
சாதியின் வீச்சு மனித உணர்வுகளை..முக்கியமாக காதலர்களின் உணர்வுகளை கிஞ்சித்தும் மதிப்பதில்லை. அதனால் ஏற்படும் இழப்புகளைப் பற்றியும் சாதிவெறிகொண்ட மனங்கள் யோசிப்பதில்லை. இந்தப்படம் அதை வலிமையாகப் பேசியிருக்கிறது. ஆக்கங்களில் சில போதாமைகள் இருந்தாலும் கதையாக கருத்தாக நம்மை கவர்கிறாள் இந்த மைத்திரி
3/5
-வெண்பா தமிழ்

