கல்வி எல்லோருக்கும் சென்றுசேர வேண்டும் என்ற அவசியத்தை நின்று பேசியிருக்கிறான் இந்த அருள்வான்
2004-ல் தேனியருகேயுள்ள ஒரு மலைப்பகுதியில் வாழும் காடர் இனத்திலுள்ள ஒரு பெண் தான் கல்வி பயில வேண்டும் என நினைக்கிறாள். அதற்காக காரணம் அந்த இன மக்களின் மூப்பர் ஒருவர் மரணிப்பதற்கு காரணமாக இருப்பது கல்லாமை என்பதே. அதனால் தன் இனத்திற்கு ஒளியும் வழியும் பிறக்க வேண்டுமென்றால் கல்வி ஒன்றே தீர்வு என முடிவெடுக்கும் அச்சிறுமி மலைவிட்டு இறங்கி தேனிமாவட்ட கலெக்டராக இருக்கும் அருள்நிதியைச் சந்திக்க வருகிறாள். கலெக்டரைச் சந்திக்கும் முன் அவள் சந்திக்கும் சவால்களும், சந்தித்த பின் நடக்கும் சம்பவங்களுமே படத்தின் கதை
முதலில் கதாநாயகன் அருள்நிதிக்கு ஒரு ராயல் சல்யூட்! ஒரு பெண்ணை முன் நிறுத்தி பயணிக்கும் கதையில் ஒரு துணைப்பாத்திரமாக நடிக்க ஒப்புக்கொண்ட அவரின் பெருந்தன்மைக்கு நிச்சயமாக நாம் சல்யூட் அடிக்க வேண்டும். கலெக்டராக அவரது நடிப்பும் அவ்வளவு இயற்கையாக இருந்தது. இந்த வருட தேசியவிருது பட்டியலில் இடம்பெறக்கூடிய எல்லாத் தகுதியோடும் நடித்துள்ளார் சிறுமி கிருத்திகா. எமோஷ்னல் காட்சிகளில் நம் கண்களையும் கலங்க வைக்கிறார். ஆரவ் ரம்யாபாண்டியன் ஜோடி இயல்பை மீறாத நடிப்பால் ஈர்க்கிறார்கள். காளிவெங்கட், ஜான் விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்ட எல்லா நட்சத்திரங்களும் தரமாக நடித்துள்ளனர்
சுகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் ஆன்மாவாக இருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டும் அதியற்புதம். ஜிவி பிரகாஷ் பின்னணி இசையால் பல உணர்வுகளை கடத்துகிறார். கதைக்கேற்ற பாடல்களும் கவர்கின்றன
படத்திற்குள் பாடமா? பாடத்திற்குள் படமா? என்ற பார்டரில் கவனமாக பயணித்துள்ளார் இயக்குநர் கணேஷ் விநாயகன். மலைவாழ் மக்கள் பலருக்கு இன்னும் கல்வி சென்றடையவில்லை என்ற விசயத்தை மிகவும் நேர்த்தியாகவும், நேர்மையாகவும் பதிவு செய்துள்ளார்
பார்த்தே ஆகவேண்டும் என சில படங்களை சொல்வோமல்ல்வா? அப்படியான படங்களில் ஒன்று இந்த அருள்வான்
4/5
-வெண்பா தமிழ்

