காதல் ரீசெட் ரிப்பீட்- விமர்சனம்

முழுக்க முழுக்க காதல்சார்ந்த ஒரு Feel good படத்தை கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் விஜய்

இசைமீது பெருங்காதல் கொண்ட நாயகி ஜியாசங்கருக்கு இசைப்பாடகரான அர்ஜுன் அசோகன் மீது பெருங்காதல் வருகிறது. ஒரு சின்ன இஸ்யூவில் அந்தக்காதலை அர்ஜுன் அசோகன் தூக்கியெறிய மனமுடையும் ஜியாசங்கர் ஒரு விபரீத முடிவை எடுக்கிறார். அதன் விளைவால் அவருக்கு ஒருநாள் நடப்பது அடுத்தநாள் மறந்துபோகும் விநோதநோய் வந்துவிடுகிறது. அந்த நோய்நாட்களில் அவரை உடனிருந்து கவனிக்கிறார் நாயகன் மதும்கேஷ். மதும்கேஷ் 10 வயது முதலே நாயகியை உயிருக்குயிராக நேசித்து வருபவர். இவரின் காதலை மறதி கொண்ட நாயகி எப்படி எதிர்கொள்கிறார்? அதன்பின் நடக்கும் புதிர்களுக்கான விடை என்ன? என்பது தான் படத்தின் மீதிக்கதை

மதும்கேஷ் அறிமுகநாயகன் என்பதால் சில இடங்களில் தடுமாறவே செய்கிறார். அதேநேரம் ஒருசில காட்சிகளில் அவரது ஆக்டிங் பக்காவாக இருப்பதும் மறுப்பதற்கில்லை. ஜியாசங்கர் பார்ப்பதற்கு தமன்னா சாயலில் இருக்கிறார். அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வாழ்த்துகள். அர்ஜுன் அசோகன் வழக்கமான எலைட் காதல்பட வில்லனாக வந்துபோகிறார். எம்.எஸ் பாஸ்கர் தன் அனுபவ நடிப்பை அழகாக கன்வே செய்துள்ளார்

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஆச்சர்யமாக ஆங்காங்கே இளையராஜா சாயல். சங்கத்தில் பாடாத கவி என்ற பாடலின் பி.ஜி.எம் படமெங்கும் ஒலிக்கிறது!! அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஆகத்தரமாக அமைந்துள்ளது. ஸ்காட்லாந்த் பேரழகை அற்புதமாக படம்பிடித்துள்ளார். வரைகலை நிறைய இடங்களில் பிசிறு தட்டியுள்ளது.

படத்தின் கதையை ஏ.மகாதேவ் மற்றும் விஜய் எழுதியுள்ளனர். திரைக்கதையை ஏ.மகாதேவ் மட்டுமே எழுதியிருக்கிறார். திரைக்கதையில் எமோஷ்னல் பேக்டர் மிகவும் குறைவு. படத்தின் ஸ்டேட்ஜிங் சிறப்பாக அமைந்திருந்தாலும், அடுத்தடுத்து வரக்கூடிய காட்சிகள் நமக்கு எளிதாக யூகிக்கக்கூடியதாக இருக்கிறது. கொஞ்சமே கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ஒரு அழகான காதல் கவிதை கிடைத்திருக்கும்.

காதல் என்பது எதிர்பார்ப்பற்றது என்ற அற்புதத்தை போதித்திருப்பதால் காதலை நேசிக்கும் யாவரும் ஒருமுறை இப்படத்தைக் காணவேண்டும்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *