‘டெவிலன்’ மூலம் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள சீகர் ராஜ்குமார்!

ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி வேலைகள் வரை, அனைத்து பணிகளையும் முடித்து, படத்தையும் திரையிடும் புதிய உலக சாதனை முயற்சியில் தயாரிப்பாளரும், நடிகருமான ராஜ்குமார் மற்றும் இயக்குநர் பிக்கய் அருண் ஈடுபட்டுள்ளனர்.

’டெவிலன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை (மே 29) மாலை 3 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் (மே 30) மாலை 3 மணி வரை நடைபெறும். 3 மணி முதல் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கி, மே 31 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, சரியாக மே 31 ஆம் தேதி, மாலை 3 மணிக்கு படத்தை திரையிடுவார்கள். இதுவரை திரைப்படத்துறை வரலாற்றில் யாரும் செய்திராத இத்தகைய சாதனை முயற்சி நோபல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற உள்ளது.

’எக்ஸ்ட்ரீம்’ மற்றும் ‘தூவல்’ ஆகிய படங்களை தயாரித்த சீகர் பிக்சர்ஸ் கமலகுமாரி.பி, ராஜ்குமார்.என் ஆகியோர் மூன்றாவதாக தயாரிக்கும் சாதனைத் திரைப்படமான ‘டெவிலன்’ படத்தை அறிமுக இயக்குநர் பிக்கய் அருண் இயக்குகிறார். இதில் நாயகனாக ராஜ்குமார் நடிக்க, நாயகிகளாக கார்த்திகா, இந்திரா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஃபெடரிக், ஆனந்தி விஜயகுமார், குழந்தை நட்சத்திரம் டோர்த்தி எஸ்.ஜே, கிருதேவ்.கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

டி.ஜே.பாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கமல்ஜித் சிங் இசையமைக்கிறார். பிரவின்.எம் படத்தொகுப்பு செய்கிறார். ஒலி வடிவமைப்பாளராக கரண் மற்றும் ஷிபின் பணியாற்றுகிறார்கள். பெருதுளசி பழனிவேல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் அறிமுக விழா இன்று (மே 28) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது புதிய முயற்சி மற்றும் 48 மணி நேரத்தில் ஒரு படத்தை முழுமையாக முடித்து திரையிடும் சாத்தியக்கூறுகள் பற்றி பகிர்ந்து கொண்டார்கள்.

படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான சீகர் ராஜ்குமார் பேசுகையில்,

“தூவல் மற்றும் எக்ஸ்ட்ரீம் படங்கள் மூலம் உங்களை சந்தித்திருக்கிறேன். எக்ஸ்ட்ரீம் படம் முடிந்த பிறகு அருண் என்னை சந்தித்தார். இந்த படம் பற்றி சொன்னார். நாங்கள் டிரையினிங் கம்பெனி நடத்துகிறோம். கார்ப்பரேட் பணியாளர்களுக்கு மெண்டார் செய்வோம். எனவே, எங்களுக்கு எதாவது ரிஸ்க் எடுக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் அருண் இந்த கதையை சொன்ன போது, நானும் என் மனைவியும் ஆலோசனை செய்துவிட்டு அவரிடம் பேசினேன். அப்போது எதை எப்படி செய்யப் போகிறீர்கள்? என்று கேட்ட போது, அவர் சில விசயங்களை மிக தெளிவாக கூறினார். மேலும், சிலரை சந்திக்க வைத்தார், அவர்களிடம் பேசும் போது சிலர் பயந்து விட்டார்கள். ஆனால், இளைஞர்களுடன் இணைந்த போது அவர்கள் செய்யலாம் என்று எங்களுடன் தைரியமாக இணைந்தார்கள். அதேபோல் நடிகர்களும் செய்யலாம் என்று எங்களுடன் இணைந்துள்ளனர். தூங்காமல் வேலை செய்யப் போகிறோம்.

இதை எப்படி செய்யப் போகிறோம், என்று எங்களுக்கும் இதுவரை தெரியவில்லை. கடவுளிடம் தான் இருக்கிறது. ஆனால், எங்களால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்கள் குழுவினரும் உற்சாகமாக இருக்கிறார்கள். என்னை பார்க்கும் போதெல்லாம் செய்யலாம் சார், என்று சொல்கிறார்கள். உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் நிச்சயம் செய்வோம். ஏற்கனவே இரண்டு படங்களுக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுத்தீர்கள். அதேபோல், இப்படி ஒரு சாதனை முயற்சிக்கு நீங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நிச்சயம் இதை வெற்றிகரமாக செய்து முடிப்போம், நன்றி.” என்றார்.

ஒரு நாளில் படப்பிடிப்பு முடித்து, அடுத்த நாள் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடிப்பது சாத்தியமா? மற்றும் எடிட்டிங் செய்து ரெண்டரிங் ஒரு நாளில் முடியுமா? உள்ளிட்ட பல கேள்விகளை நிருபர்கள் படக்குழுவினரிடம் கேட்டனர். அந்த கேள்விகளுக்கு இயக்குநர் பிக்கய் அருண் பதில் அளிக்கையில்,

”நீங்க சொல்வது உண்மை தான். எடிட்டிங் செய்து விடலாம், ஆனால் அதை அவுட் எடுக்க ரெண்டரிங் போட்டால் நேரம் அதிகம் ஆகும். அதேபோல் கிராபிக்ஸ் காட்சிகளை ரெண்டரிங் எடுப்பதும் அதிகம் நேரம் பிடிக்கும். ஆனால், அவற்றை குறுகிய நேரத்தில், வேகமாக செய்வது எப்படி, அதற்காக எத்தகைய சாப்ட்வேர்களை பயன்படுத்த வேண்டும், என்பதை நாங்கள் ஆராய்ந்து, அதற்கான சரியான தொழில்நுட்பங்களை தேர்வு செய்து வைத்திருக்கிறோம். அது என்ன? என்பதை இங்கு சொல்ல முடியாது. காரணம், இதற்காக நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். இந்த இடத்தில் அதை சொல்லிவிட்டு, பிறகு வேறு யாராவது அதை பயன்படுத்தி விட கூடாது அல்லவா அதற்காக தான்.

இது சாத்தியம் இல்லாத விசயம் தான், ஆனால் அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதை சரியான முறையில் திட்டமிட்டிருக்கிறோம். திகில், ஃபேண்டஸி, மிஸ்டரி என மூன்று ஜானர்களைக் கொண்ட படமாக இருக்கும். திகிலில் தொடங்கி ஃபேண்டஸியாக உருவெடுத்து மிஸ்டரியாக முடிவடையும். படத்தில் ஒரு பாடல் இருக்கிறது, முடிந்தால் அதை படமாக்குவோம், இல்லை என்றால் அது படத்தில் இருக்காது. படத்திற்கு சென்சார் கேட்டோம். ஆனால், அவர்கள் அரசு துறை சார்ந்தவர்கள் என்பதால், உங்களுடன் பணியாற்ற முடியாது. நீங்கள் படத்தை முடித்து, தணிக்கை சான்றிதழுக்கானபணிகளை செய்யுங்கள், எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறோம், என்று சொன்னார்கள். அதே சமயம், படக்குழுவுக்கு திரையிட சென்சார் சான்றிதழ் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் நோபல் சாதனை அமைப்பும், நீங்கள் படத்தை முழுமையாக முடித்து திரையிட்ட உடன் உங்களுக்கு சான்றிதழ் வழங்குவோம். திரையிடுவது மிக அவசியம் என்று சொன்னார்கள். அதனால், பிரசாத் லேபில் அவர்களுக்கு திரையிட இருக்கிறோம்.” என்றார்.

இப்படி ஒரு முயற்சியில் ஈடுபட என்ன காரணம்? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் பிக்கய் அருண், “நான் நிறைய கதைகளை எழுதி வைத்து அதை வேறு சிலர் படமாக எடுத்து விட்டார்கள். அனைத்தும் பெரிய பெரிய படங்கள். ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் யார் என்பது இப்போது சொல்ல முடியாது, ஆனால் நிச்சயம் ஒரு நாள் சொல்வேன். அதனால் எதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒரு நல்ல கதை, அதை நல்லபடியாக எடுத்து முடித்தாலும் கூட புதியவர்கள் என்பதால் அந்த படங்களை வாங்க மறுக்கிறார்கள். அதுபோல் பல படங்கள் இருக்கிறது. நல்ல படமாக இருந்தாலும் புதியவர்கள் என்பதால் அந்த படங்களை யாரும் திரும்பி கூட பார்ப்பதில்லை. இதுபோன்ற ஒரு புதிய முயற்சி என்றால் நிச்சயம் திரும்பி பார்ப்பார்கள், பிறகு படம் நன்றாக இருந்தால் அது மக்களிடம் எளிதில் சென்றடையும். அதற்காக தான் இப்படி ஒரு முயற்சியில் ஈடுபட்டேன். இது மிகப்பெரிய ரிஸ்க்கான முயற்சி தான் என்பது எனக்கு தெரியும், ஆனால் அதை நிச்சயம் வெற்றிகரமாக செய்து முடித்து சாதிப்பேன், என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *