முத்தத்தில் துவங்கி முத்தத்தில் முடியும் காதல் எத்தனை பேருக்கு வாய்க்கிறது? என்ற புகழ்பெற்ற கவிதை ஒன்றுண்டு. இந்தக் கவிதைக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லை என்றாலும், படம் முத்தம் சம்பந்தப்பட்டது என்பதால் லைட் ஆ நாம் சம்பந்தப்படுத்திக்கிட்டோம்
ஹீரோ கவினுக்கு முற்காலத்தில் செய்த பாவத்தின் தொடர்ச்சியாக ஓர் பேண்டஸி பவர் கிடைக்கிறது. அந்தப் பவரால் பலர் வாழ்வில் அவர் சோதனைகளை நிகழ்த்துகிறார். காதல் என்றாலே வெறுக்கும் அவர் வாழ்வில் ஒரு காதல் வருகிறது. ஆனால் தனக்கிருக்கும் பவரால் தன் காதலிக்கு ஆபத்து என்பதால் வந்த காதலை உதறுகிறார் கவின். பின் காதலியோடு அவர் இணைந்தாரா என்பதே மீதமுள்ள கதை
ஈசியா லெப்ட் ஹேண்டில் டீல் செய்கிற கேரக்டர் என்பதால் அசால்டாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார் கவின். அவருக்கு இணையாக ஹீரோயினின் நடிப்பும் அழகும் அட்டகாசம். விடிவி கணேஷ் தான் இந்தப்படத்தின் நல்ல டிபன்ஸ் ஆட்டக்காரர். மனிதர் படத்தை கீழே போகவிடாமல் தடுத்தாடுகிறார். ஆர்.ஜே விஜய் கூடுமானவரை நல்ல நல்ல கவுண்டர்கள் கொடுக்கிறார். தேவயானி, கெளசல்யா உள்ளிட்ட இன்னபிற கேரக்டர்களும் ஒகே ரகம்
காதல் படம் என்பதால் இசை அமைப்பாளர் எல்லா இன்ஸ்ட்ருமெண்ட்ஸிலும் காதலை வழிய விட்டுள்ளார். பின்னணி இசை பாடல்கள் இரண்டிலுமே காதல் ததும்புகிறது. ஒளிப்பதிவாளர் எல்லா ஷாட்களையும் ஸ்கிரீன்ஷாட் மெட்டிரியலாக மாற்றித் தந்துள்ளார். கண்களைத் துருத்தாத அழகியல் அம்சங்களால் ஒளிப்பதிவாளர் மகுடம் சூடப்பெறுகிறார்
காதலர்கள் முத்தமிடுவதைப் பார்த்தாலே அவர்களின் எதிர்காலம் ஹீரோவிற்கு தெரியும் என்ற ஐடியா செம்ம இன்ட்ரெஸ்டிங்! அந்த நூலை அப்படியே பிடித்து சுவாரஸ்யமான திரைக்கதையை பின்னியிருப்பதில் டைரக்டரின் புத்திசாலித்தனம் பளீச்சிடுகிறது. தேவயானி கெளசல்யா எமோஷ்னல் காட்சிகளில் நிறைய நாடகத்தன்மை எட்டிப்பார்ப்பது மைனஸ்! படம் எதிர்பார்த்தபடியே முடிவது கூட!
அடிமனது இன்னும் கனமான க்ளைமாக்ஸை எதிர்பார்த்தது உண்மை ஆனாலும் இந்த Kiss 2K kid மிஸ் பண்ணக்கூடாத ஒன்று என்பதும் உண்மை
3/5
-வெண்பா தமிழ்

