குழந்தைக் கடத்தலை முன் வைத்து ஒரு எமோஷ்னல் ட்ராமாவை திரில்லர் கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் மாறன்
ஜிவி பிரகாஷ் ஒரு கொரியர் கம்பெனியில் டிரைவராக வேலை செய்கிறார். கொரியர் பார்சலில் குகைன் இருப்பது தெரியாத அவர், தான் ஓட்டி வந்த வண்டியைத் தொலைத்து விடுகிறார். ஜிவியின் ஓனர் ஜிவியின் காதலியை கடத்தி வைத்துக்கொண்டு வண்டியும் சரக்கும் வந்தே ஆகவேண்டும் என மிரட்டுகிறார். இச்சூழலில் தொழிலதிபர் ஸ்ரீகாந்தின் மகளைக் கடத்தினால் பணம் தருவதாக ஜிவிக்கு ஒரு ஆபர் வருகிறது. ஜிவி தன் நண்பர் ரமேஷ்திலக்கோடு குழந்தையைக் கடத்தச் செல்கிறார். அவர் குழந்தையைக் கடத்தினாரா? ஜிவிக்கு இந்த ஆபரைக் கொடுத்தது யார்? இதில்லாமல் இன்னும் சில கிளைக்கதைகளோடு பயணிக்கிறது ப்ளாக்மெயில் திரைக்கதை
ஜிவி பிரகாஷ் விட்டுவிட்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் எமோஷ்னல் காட்சிகளில் சற்று ஜம்ப் ஆகியே நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் கேரக்டர் ஸ்ட்ராங்காக எழுதப்பட்டுள்ளது. கொடுத்த வேலைக்கு அவரும் குறை வைக்கவில்லை. ரமேஷ் திலக் வழமை போல அருமையாக நடித்துள்ளார். ஜிவி காதலி கேரக்டரும், ரமேஷ் திலக் மனைவி கேரக்டரும் ஒகே ரகம். லிங்கா கேரக்டர் ஒரு மார்க்கமான கேரக்டர். அவரும் இயல்பாக நடித்துள்ளார். இன்னும் சிலர் நல்ல நடிப்பையே கொடுத்துள்ளனர். பிந்துமாதவி கேரக்டரை உள்வாங்கி நல்ல எமோஷ்னலை வெளிப்படுத்தியுள்ளார்
சாம்.சி. எஸ் பின்னணி இசைக்கென்றே பிறந்தவர் என்பதால் நன்றாக வாசித்துள்ளார். ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் கோயமுத்தூரின் சகல ஏரியாக்களையும் தன் கேமாராவிற்குள் கொண்டு வந்துள்ளார். ஷான் லோகேஷின் கிரிஸ்ப்பான எடிட்டிங் திரைக்கதைக்கு சப்போர்ட் செய்தாலும் நிறைய ஷாட் மிஸ்ஸிங் எடிட்டிங்கில் துருத்திக் கொண்டு தெரிகிறது
துளிகூட டல் அடிக்காத பரபர காட்சிகள் படத்தை வேகமாக நகர்த்துகிறது. ஆனால் எந்தக் கேரக்டர்களின் எமோஷ்னலும் நம்மோடு கனெக்ட் ஆகவேயில்லை. ஷாட் டிவேஷனும், சுமாரான மேக்கிங்கும் படம் மீதான நம்பகத்தன்மையை குறைக்கவே செய்கிறது. கொஞ்சம் அப்டேட் செய்து மேக்கிங்கிலும் ரைட்டிங்கிலும் கவனம் செலுத்தியிருந்தால் அற்புதமான திரில்லர் படம் கிடைத்திருக்கும்.
எந்த எதிர்பார்ப்புமின்றி சென்றால் ப்ளாக்மெயில் ஒண்டைம் வாட்சபிள் மூவியாக உங்களுக்கு வொர்க்கவுட் ஆகலாம்
3/5
-வெண்பா தமிழ்

