காத்து வாக்குல ஒரு காதல்- விமர்சனம்

காத்து வாக்குல பல கொலைகள் செய்யும் கூட்டத்திற்குள் காதல் பூத்தால் என்னவாகும்? அதுதான் படம்

படத்தின் துவக்கத்தில் ஹீரோ மாஸ் ரவி உருகி உருகி ஒரு பெண்ணை காதலிக்கிறார். அவர் வாழ்வே காதலால் தீர்மானிக்கப்பட்டதாக நினைக்கிறார். இந்தக் கதை ஒருபுறம் என்றால் வடசென்னையில் ரவுடிகளுக்குள் கேங்வார் நடக்கிறது. அதாவது வடசென்னையின் தாதாவான சூப்பர் சூப்பராயன் தனக்குப் போட்டியாக வரும் ஒருவரை சாய் தீனாவை வைத்து வெட்டுகிறார். அதன்பின் சாய் தீனா கூடவே இருந்து சூப்பர் சூப்பராயனை கொல்கிறார். இந்தத் தொடர் கேங்வாருக்குள்ளும் காதலே தெய்வீகம் என வாழும் ஹீரோ இதுக்கிறார். அது எப்படி? ஒருவேளை அப்படி இருக்குமோ? என யோசிக்க வைத்து, நாம் யோசிக்காத வகையில் முடிகிறது படம்

படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு ஹீரோவாகவும் நடித்துள்ளார் மாஸ் ரவி. லவ் தான் எல்லாம் என காதலியோடு உருகும் போது அப்பாவியாக ஈர்க்கிறார். திடீரென அவர் ஆக்சன் அவதாரமும் எடுக்கிறார். நாயகிகள் இருவரும் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர். படத்தில் சிரிப்பிற்கும் ஆக்சனுக்கும் கியாரண்டி தருகிறார் சாய் தீனா. அவர் கூடவே கல்லூரி வினோத் அட்டகாசம் செய்கிறார். ஆதித்யா கதிர் வழக்கம் போல் ஈர்க்கிறார். சற்று நேரமே வந்தாலும் சூப்பர் சூப்பராயன் ஆறுபாலா ஆகியோர் தங்கள் நடிப்பில் குறை வைக்கவில்லை

படத்தில் இசை அமைப்பாளர் தன் பொறுப்புணர்ந்து வேலை செய்துள்ளார். இருந்தும் பாடல்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒளிப்பதிவாளர் கூடுமான வரை தனது பங்களிப்பை திறம்படச் செய்துள்ளார். மாஸ் ரவி மாஸ் காட்டும் இடங்களில் கேமரா சுற்றிச் சுழல்கிறது

கதையை ஹெவியாக உருவாக்கிய இயக்குநர் மாஸ் ரவி திரைக்கதையை சின்னதாக டீல் செய்துவிட்டார். முதல்பாதியில் நிறைய விசயங்கள் பேசப்படுகிறது. எதிலுமே கோர்வையில்லை. இளைஞர்களை வன்முறைக்கு இழுக்கும் ரவுடிகளை கேள்வி கேட்கிறது படம். ஆனால் அந்தக் கட்டத்திற்கு படம் வருவதற்குள் நாம் டயர்ட் ஆகிவிடுகிறோம். இது ஒருபுறம் இருந்தாலும் க்ளைமாக்ஸில் யாருமே எதிர்பாராத ட்விஸ்ட்-ஐ வைத்து அசத்திவிட்டார் இயக்குநர். சாய் தீனாவிற்கு கொடுக்கப்பட்ட என்ட்-லும் புத்திசாலித்தனம் தெரிகிறது. சிறிய படங்கள் வலிமையான கதையோடு வரும்போது குறைகள் மறந்து தட்டிக்கொடுக்க வேண்டும். அந்த வகையில் காத்துவாக்குல ஒருகாதலை தட்டிக் கொடுப்போம்

காத்து வாக்குல ஒரு காதல்- போற போக்குல ஒரு சாரல்
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *