முற்றிலும் புதிய அனுபவத்துடன் ஒரு படம்
தன் காதலி ஆர்ஷா சாந்தினி பைஜுவை கரம்பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டு சென்னை வேளச்சேரியில் ஒரு ப்ளாட் வாங்குகிறார் தர்ஷன். அவர் நினைத்தபடியே காதலியோடு வேளச்சேரி வீட்டில் குடியேறுகிறார். அவ்வீட்டில் சில அமானுஷ்யங்கள் நடக்கின்றன. அந்த அமானுஷ்யங்களுக்கான காரணம் பேய் என நம்ப வைக்கப்படுகிறது. பின் காளி வெங்கட் குடும்பம் அறிமுகம் ஆகிறது. தர்ஷன் இருக்கும் அதே வீட்டில் 10 ஆண்டுகளுக்கு முன் காளிவெங்கட் குடும்பமும் இருந்தது/ இருக்கிறது. ஆக ஒரே வீட்டில் இருவேறு காலகட்டத்தில் இரு குடும்பம் வாழ்கிறது என்பது தெரியவர, முடிவு என்ன என்பதை நோக்கித் திரைக்கதை பிரில்லியண்டாக பயணிக்கிறது
காளிவெங்கட் இனி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் யோசிக்காமல் அவர் கேரக்டராக மாறியிருக்கிறார் என்று எழுதிவிடலாம். அவரின் நடிப்பின் ஆழம் அத்தகையது. அவரின் மனைவியாக வரும் வினோதினி காமெடிக்கு குறைந்த பட்சம் உத்திரவாதம் தருகிறார். தர்ஷன் பொறுப்புணர்ந்து தன் கேரக்டரை உள்வாங்கி நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். நாயகி அர்ஷா சாந்தினி பைஜு தமிழுக்கு நல் வரவு. பல இடங்களில் அவரிடம் முதிர்ச்சியான நடிப்பு வெளிப்பட்டுள்ளது
காட்சிக்கு காட்சி நம்மை எக்சைட் பண்ண வைக்கும் திரைக்கதைக்கு ஏற்ற வகையில் இசையை வழங்கியுள்ளார் ராஜேஷ் முருகேசன். மோகன் ராஜன், உமாதேவி ஆகியோரின் பாடல் வரிகளும் அருமை. MS.சதீஷ் சிறந்த ஒளிப்பதிவை வழங்க, மிக மிக ஷார்ப்பாக உழைத்துள்ளார் எடிட்டர் A.நிஷார் ஷரேஃப்
ஹாலிவுட் ஐடியா என்றாலும் அதைத் தமிழ் மக்களுக்கு ஏற்ற வகையில் எமோஷ்னலை மிக்ஸ் செய்து அசத்தியுள்ளார் இயக்குநர் T.ராஜவேல். படம் துவங்கி 20 நிமிடங்கள் நமக்குப் பொறுமை பாடமெடுக்கும் இயக்குநர் அதன்பின் தந்ததெல்லாம் சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ்! வாவ் என்னவொரு அசத்தலான திரைமொழி! படத்தில் எழும் எல்லாக் கேள்விகளுக்கும் க்ளீரான பதில்களைச் சொல்லும் இயக்குநர் க்ளைமாக்ஸில் நச்சென்று ஒரு காரியத்தைச் செய்து அட போட வைத்துள்ளார்.
கால இயந்திரம் மூலம் கடந்தகாலம் செல்லும் படங்களைப் பார்த்த நமக்கு இந்தப்படம் நிச்சயமாக புதிய அனுபவத்தைத் தரும். குடும்பத்தோடு கிளம்புங்க மக்களே!
3.75/5
-வெண்பா தமிழ்
#Hiusemates

